பிரம்மாண்டம், பிரமிப்பு நிறைந்த மரைக்காயர்... டிரெய்லர் வெளியீடு!

  • IndiaGlitz, [Tuesday,November 30 2021]

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகி 3 தேசிய விருதுகளையும் 3 கேரள விருதுகளையும் அள்ளிக் குவித்து இருக்கும் திரைப்படம் “மரைக்காயர் அரபுக்கடலின் சிங்கம்“. இந்தப் படத்தின் பிரமிப்பூட்டும் டிரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

நடுக்கடலுக்கு நடுவே நவீன ஆயுதம் ஏந்திவரும் ஆங்கிலப்படை ஒருப்பக்கம், வீரம் தோய்ந்து வாளேந்தி நிற்கும் நாட்டுப்படை இன்னொரு பக்கம் என்று 16 ஆம் நூற்றாண்டில் நடந்த போர்க்காட்சிகளை பிரம்மாண்டத்துடன் காட்சிப்படுத்தி இருக்கிறது மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் திரைப்படத்தின் டிரெய்லர். பிரம்மிப்பூட்டும் காட்சிகளும் வலிமையான வசனங்களும் கொண்ட இந்த டிரெய்லர் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் கடும் எதிர்ப்பார்ப்பை கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த எதிர்ப்பார்ப்பை டிரெய்லர் பூர்த்தி செய்திருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் இருந்த இந்தப் படம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

மேலும் கப்பற்படைத் தலைவர்- குஞ்சாலி எனப் போற்றப்படும் மரைக்காயர் வம்சத்தில் 4 ஆவது மரைக்காயராக இந்தப் படத்தில் நடிகர் மோகன் லால் நடித்திருக்கிறார். இவருடன் நடிகை கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன், சுஹாசினி எனப் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் 5 மொழிகளில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தத் திரைப்படம் ஏற்கனவே சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த விஷுவல் எபெஃக்டஸ் 3 பிரிவுகளில் 3 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது. மேலும் கேரள அரசின் 3 விருதுகளையும் இந்தப் படம் தட்டிச்சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.