'மாப்பிள்ளை சிங்கம்' திரைவிமர்சனம் - டைம் பாஸ் காமெடி படம்

  • IndiaGlitz, [Friday,March 11 2016]

விமல் நடித்த கிராமிய பின்னணி கொண்ட படங்களில் 'மாப்பிள்ளை சிங்கம்' படமும் ஒன்று. ஒரு சீரியஸான விஷயத்தை கூட நகைச்சுவை மூலம் சிந்திக்க வைக்கும் அளவுக்கு கொடுக்க முடியும் என்பதை இந்த படம் நிரூபித்துள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்தை மட்டுமே கொண்ட இந்த படம் எப்படி? என்பதை இப்போது பார்ப்போம்.

வீரபாண்டியூர் என்ற கிராமத்தில் தேரை யார் முதலில் இழுப்பது என்று இரு பிரிவினர்களுக்கு இடையே தோன்றும் பிரச்சனையில் இருந்து படம் ஆரம்பிக்கின்றது. அந்த ஊரின் சேர்மனும் ஒரு பிரிவின் தலைவருமான ராதாரவி ஒருபுறமும், முனீஷ்காந்த் ஒரு பிரிவினரும் தாங்கள்தான் தேரை இழுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க கடைசியில் கலவரத்தில் முடிகிறது.

மேலும் ராதாரவிக்கு ஊரில் யார் காதல் செய்தாலும் பிடிக்காது. பெண்கள் படிக்க வைக்காமல் அடுப்பங்கரையில் இருக்க வேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. ஆனால் அவருடைய மகளான மதுமிளா பெரிய படிப்பு படித்து ஐ.டி.யில் வேலை செய்ய முயற்சி செய்வதோடு, இன்னொரு பிரிவினரான விஷ்ணுவையும் காதலிக்கின்றார். (இவர்கள் இருவர்தான் ஆபீஸ் தொலைக்காட்சி சீரியலின் ஜோடி). இந்த காதல் குறித்து கேள்விப்பட்ட மதுமிளாவின் அண்ணன் விமல், விஷ்ணு வீட்டிற்கு சென்று மிரட்டுகின்றார். ஆனால் விஷ்ணுவின் தங்கையான அஞ்சலி, விமல் கோஷ்டியை பயமுறுத்தி அனுப்பிவிடுகிறார். இந்த சிறு மோதலுக்கு பின்னர் விமல்-அஞ்சலி இடையே காதல் பிறக்கின்றது. விமல்-அஞ்சலி காதலும், விஷ்ணு-மதுமிளாவின் காதலும் என்ன ஆயிற்று, ராதாரவின் சாதி துவேஷம் நீங்கியதா? தேரை கடைசியில் இழுத்தார்களா? என்பது தான் மீதிக்கதை.

விமலுக்கு வழக்கம்போல் கிராமத்து வேடம் கச்சிதமாக பொருந்துகிறது. அதிலும் காதலை சூரி குழுவினர்களுடன் சென்று பிரிப்பது உள்பட பல காட்சிகளில் கலக்குகிறார். அஞ்சலியை காதலிக்க தொடங்கியவுடன் காதலுக்கு திடீரென சப்போர்ட் செய்வது, தங்கை காதலை சேர்த்து வைப்பது, இறுதியில் புத்திசாலித்தனமான ஐடியா மூலம் தேரை இழுக்க வைப்பது என விமல் படம் முழுவதும் கலகலப்பாக நடித்துள்ளார்.

சுந்தர் சியின் 'கலகலப்பு' உள்பட பல படங்களில் கவர்ச்சியில் ஜொலித்த அஞ்சலி இந்த படத்தில் கிளாமர் இல்லாமல், அதே நேரத்தில் போல்டான வக்கீல் வேடத்தில் வருகிறார். பெண்கள் தங்கள் வாழ்க்கைத்துணையை தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை வேண்டும் என்பது உள்பட பல புரட்சிக்கருத்துக்களை தெரிவிக்கின்றார். சேர்மன் பதவிக்காக தேர்தலில் நிற்பது, அண்ணன் காதலை சேர்த்து வைக்க விமலிடம் பேசுவது, சூரியை அவ்வப்போது கலாய்ப்பது என அஞ்சலிக்கு இந்த படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு. அதை அவரும் தவறாமல் பயன்படுத்தியுள்ளார்.

சூரி, காளி வெங்கட், முனீஷ்காந்த், சுவாமிநாதன் உள்பட அனைவரது டைமிங் காமெடிக்கள் படத்தில் கலகலப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக அந்த வெள்ளைக்காரர் பேசும் வசனங்கள் மூலம் நமது சமுதாயத்தின் அவலங்களை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர். ராதாரவி வழக்கம்போல் முறைப்பாக வருகிறார். அஞ்சலி குடும்பத்தை பழிவாங்குவதாக நினைத்து கொண்டு அஞ்சலியை தூக்கிட்டு வந்து தாலி கட்டு என்று விமலிடம் ராதாரவி சீரியஸாக கூறும்போது அதற்கு சூரி கொடுக்கும் கவுண்ட்டரால் ஆடியன்ஸின் குபீர் சிரிப்பு அடங்க சில நிமிடங்கள் ஆகிறது.

ராஜசேகரின் திரைக்கதையில் 100% நகைச்சுவை உள்ளதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். குத்துப்பாட்டு இல்லாமல், கவர்ச்சி காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் டைம் பாஸ் ஆக பார்க்கும் வகையில் ஒரு கிராமத்து படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

என்.ஆர்.ரகுநாதனின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. கிராமத்து கதைக்கு ஏற்ற பின்னணி இசையும் படத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது. படத்திற்கு பெரும் பலமாக இருப்பது டான் அசோக்கின் வசனங்கள். தற்கால சமூகத்திற்கு தேவையான கருத்துக்களையும் நகைச்சுவை வசனங்களால் புரியவைத்துள்ளார்.

மொத்தத்தில் 'மாப்பிள்ளை சிங்கம்' குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நகைச்சுவை திரைப்படம்.