மன்சூர் அலிகானை கட்சியில் இருந்து நீக்கிய பொதுச்செயலாளர்.. உலகில் இதுதான் முதல் முறை..!
- IndiaGlitz, [Saturday,March 16 2024]
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய நிலையில் ஒரு சில நாட்களில் கட்சியின் தலைவரான மன்சூர் அலிகான் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் தலைவராகவும் கண்ணதாசன் என்பவர் பொதுச் செயலாளராகவும் கொண்ட இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சி சமீபத்தில் தொடங்கப்பட்டது என்பதும், இந்த கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது. சமீபத்தில் கூட மன்சூர் அலிகான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடிய போது கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலைகள் திடீரென நேற்று இரவு அவசர செயற்குழு கூட்டம் மீண்டும் கூடி, கட்சித் தலைவர் மன்சூர் அலிகான் நீக்கப்படுவதாகவும் தலைவர் இல்லாமல் பொதுச்செயலாளர் வழிகாட்டுதலின்படி கட்சி செயல்படும் என்றும் தலைவருக்கு உண்டான அதிகாரம் அனைத்தும் பொதுச் செயலாளருக்கு மாற்றப்படுகிறது என்றும் தீர்மானம் ஏற்றப்பட்டது.
இதனை அடுத்து உலகிலேயே ஒரு கட்சியின் தலைவர் நீக்கப்படுவது இந்த கட்சியில் தான் என அரசியல் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். தான் ஆரம்பித்த கட்சியில் இருந்தே மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருடைய அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.