தியேட்டரில் கூட்டம் குறைய கமல் தான் காரணம்: மன்சூர் அலிகான்
- IndiaGlitz, [Tuesday,July 04 2017]
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலர் கிண்டல் செய்து மிமி கிரியேட் செய்தாலும் இந்த நிகழ்ச்சியை கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோர் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியால் தியேட்டரில் கூட்டம் குறைந்து வருவதாகவும், இதற்கு கமல்ஹாசனே காரணம் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
'கோலி சோடா' கிஷோர் ஹீரோவாக நடிக்கும் 'உறுதிகொள்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் பேசியதாவது:
சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள். அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டம் போல் கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்களுக்கு அந்த டி.வி. காரங்க ஏதோ படி அளக்கிறாங்க. அவங்க கஷ்டம் தீரட்டும், அதுகூட பரவாயில்லை. ஆனால் கமல் ஒரு உலகப்புகழ் பெற்ற நடிகர். அவர் மாதிரி சாதனை கலைஞர், இந்த மாதிரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமாவை அழிக்க காரணமாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் மாலை காட்சி, இரவு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிற கூட்டம் குறைந்துள்ளது. அதே நிகழ்ச்சியை மறுநாள் காலையும் அந்த டிவி ஒளிபரப்புவதால் காலை காட்சிக்கும் கூட்டம் வருவதில்லை. ஆக எல்லா காட்சிகளுமே அந்த ஒரு நிகழ்ச்சியால் பாதிக்கப்படுகிறது.
நாளை கமல் படம் வெளிவரும் போது அஜீத்தோ, விஜய்யோ அல்லது யாரோ ஒரு பெரிய நடிகர் இதே போன்ற ஒரு நிகழ்ச்சி நடத்தி, அதனால் அவரது படத்தின் வசூல் பாதித்தால் என்னவாகும் என்பதை கமல் யோசிக்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் கூறினார்.