பிறந்த நாள் வாழ்த்துக்கள் யுவன்சங்கர் ராஜா
- IndiaGlitz, [Thursday,August 31 2017]
இசைஞானி இளையராஜாவின் இசை வாரிசும், இளைய இசைஞானியுமான யுவன்சங்கர் ராஜா இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு IndiaGlitz சார்பில் எங்களுடைய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
கடந்த 1997ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த 'அரவிந்தன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன்சங்கர் ராஜா, இசையுலகில் 20 வருடங்கள் இசை சாம்ராஜ்யம் நடத்தி 100 படங்களுக்கும் மேல் சுமார் 700 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை ஹிட் பாடல்கள்தான்.
செல்வராகவன், வெங்கட்பிரபு, ராம், லிங்குசாமி, சீனுராமசாமி போன்ற இயக்குனர்களின் படங்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். அதேபோல் யுவன்சங்கர்-நா.முத்துக்குமார் கூட்டணியில் நூற்றுக்கணக்கான காலத்தால் அழியாத பாடல்கள் உருவாகியுள்ளது.
தரமணி, ஆரம்பம், பில்லா 2, மங்காத்தா, பாஸ் என்கிற பாஸ்கரன், பையா, சிவா மனசுல சக்தி, யாரடி நீ மோகினி, பில்லா, வேல், கற்றது தமிழ், சென்னை 600028, தீபாவளி, 7G ரெயின்போ காலனி, நந்தா, தீனா, என யுவன் இசையமைத்த சூப்பர் ஹிட் படங்களை அடுக்கி கொண்டே போகலாம்
இசையமைப்பாளராக மட்டுமின்றி ஒரு சிறந்த பாடகராகவும் யுவன்சங்கர் ராஜா விளங்கி வருகிறார். இளையராஜா இசையில் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் இடம்பெற்ற 'சாய்ந்து சாய்ந்து' என்ற பாடல், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'மரியான்' படத்தில் இடம்பெற்ற 'கடல் ராசா நான்', ஜி.வி.பிரகாஷ் இசையில் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில் இடம்பெற்ற 'முத்தம் கொடுத்த மாயக்காரி' மற்றும் அவருடைய இசையமைப்பில் ஏராளமான பாடல்களை அவர் பாடியுள்ளார்.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழிக்கேற்ப இசைஞானி ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து செய்த சாதனையை இளம் இசைஞானி முறியடித்து பெரும்புகழை அடைய இந்த பிறந்த நாளில் மீண்டும் அவருக்கு எங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்