Manmatha Leelai Review
மன்மத லீலை - எதிர்பாராததை எதிர்பாருங்கள்
வெங்கட் பிரபு தனது முதல் படமான 'சென்னை 600028' துவங்கி தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு புது விஷயத்தை தமிழ் ரசிகர்களுக்கு சொல்ல தவறியதில்லை. மன்மத லீலையில் அவர் நியோ நாயிற் (நியோ noir ) எனப்படும் புது திரைக்கதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
மன்மத லீலை திரைக்கதை 2010 லும் 2020 ழும் சத்யா (அசோக் செல்வன்) என்கிற பிலேபாய் இளைஞர் வாழ்க்கையில் நடக்கும் இரு வேறு சம்பவங்களுடன் துவங்குகிறது. நிகழ்காலத்தில் மனைவி அனு (ஸ்ம்ருதி வெங்கட்) மற்றும் குழந்தையுடன் சத்யா (அசோக் செல்வன்) இன் தற்போதைய மகிழ்ச்சியான மற்றும் பணக்கார குடும்ப வாழ்க்கை மற்றும் பத்தாண்டுகளுக்கு முன்பு பூர்ணி (சம்யுக்தா ஹெக்டே) உடனான அவரது ஆன்லைன் காதல் ஆகியவை மாறி மாறி பயணிக்கிறது. . சத்யா தனது மனைவி இல்லாத நேரத்தில், தற்செயலாக அவரது வீட்டுக்கு வரும் ஒரு கவர்ச்சியான இளம் பெண்ணான லீலாவை (ரியா சுமன்) வீழ்த்தும் எண்ணத்தில் வீட்டுக்குள் அனுமதிக்கிறார். அதே போல் பத் தாண்டுகளுக்கு முன் அவர் பூர்ணியின் அப்பா (ஜெயப்ரகாஷ்) இல்லாத நேரத்தில் அவர் வீட்டுக்கெய் சென்று அவரை அடைய முயற்சிக்கிறார். பூரணி மற்றும் லீலா ஆகிய இருவருடனும் நினைத்த காரியத்தை சாதிக்கிறார் ஆனால் முறையே அவள் அப்பா மற்றும் தன் மனைவியிடம் மாட்டிக்கொள்கிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பது விறு விருப்பன யூகிக்க முடியாத திருப்பங்களுடன் கூடிய மீதி வெங்கட் பிரபுவால் மட்டுமே கையாளக்கூடிய திரைக்கதையில் பயனப் படுகிறது படம்.
முன்னதாக 'ஓ மை கடவுளே' படத்தில் அசோக் செல்வன் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிரூபித்தார்.இதில் இன்னும் முதிர்ச்சியடைந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும் . படத்தில் அவர் நகைச்சுவையாகவும், அப்பாவியாகவும், கவர்ச்சியாகவும், ஆடம்பரமாகவும், கெட்டவராகவும் பல்வேறு அவதாரங்களை எடுத்து ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்திருக்கிறார். பக்கத்து வீட்டுச் சாதாரணப் பையனிலிருந்து இரக்கமற்ற தொழிலதிபராக அவர் மாறுவது ரசிகர்களுக்கு ஓர் விருந்தாக அமைகிறது . சம்யுக்தா ஹெக்டே, 2010ல் இணைய மோகம் ஆரம்ப நிலையில் இருக்கும்போது அதன் மூலம் காதலிக்கும் அப்பாவி பெண்ணாக தோன்றி பின் அதிற்சியளிக்கும் கதாபாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் ஹீரோவையும் பார்வையாளர்களையும் ஏமாற்றும் விதம் மிக ரசனையாக எடுக்கப்பட்டிருக்கிறது. . சத்யாவை கண்ணியில் சிக்கவைக்கும் லீலாவாக ரியா சுமனும் இரு முகம் கொண்ட பாத்திரப்படைப்பில் மின்னியிருக்கிறார். ஹீரோவின் காதல் மனைவியாக ஸ்ம்ருதி வெங்கட் கச்சிதம் . எதிர்மறையான வேடத்தில் சந்திரமௌலியும், சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் ஜெயபிரகாஷும் மனதில் நிற்கும் நடிப்பை தந்திருக்கிறாரகள்.
'மன்மத லீலை'யில் வெளி தோற்றத்திற்கு ஒரு அடல்ட் காமடி போல தோன்றினாலும் அது ஒரு கிரைம் த்ரில்லராக உருவெடுத்து பார்வையாளர்களை கவர்வதில் பெரிதும் ஜெயிக்கிறது. நல்ல வேளை மெசேஜ் சொல்கிறேன் என்று கடைசியில் சொதப்பாமல் எதிர்மறையாகவே படம் முடிவதும் தமிழுக்கு புதிது. சம்யுக்தா, ஜெயபிரகாஷ், ரியா மற்றும் குறிப்பாக அசோக் செல்வன் கதாபாத்திரங்களில் வரும் திருப்பங்கள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. முதல் பாதி இழுவையாக செல்வது போல் தோன்றினாலும் இறுதியில் புள்ளிகள் இணைக்கப்படும்போது அதுவும் நியாயப்படுத்தப்படுகிறது.
மைனஸ் என்று பார்த்தல் வெங்கட் பிரபு படங்களில் வரும் குபீர் நகைச்சுவை இதில் கொஞ்சம் மிஸ்ஸிங் அதுவும் அடல்ட் காமடி முதல் பாதியில் எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் சிரிப்பு சகவிதம் குறைவுதான். அதன் காரணமாகவே முதல் பாதியில் உட்காருவது கொஞ்சம் கடினமாக உள்ளது. அடல்ட் காமெடியை எதிர்பார்ப்பவர்களும் சற்று ஏமாற்றம் அடையலாம். டிரைலரில் காண்பித்த முத்தக்காட்சிகள் அழகியலிலும் சேராமல் கிளர்ச்சியில் சேராமல் கடந்து செல்கின்றன. முதல் மற்றும் இரண்டாம் பாதி இரண்டிலுமே ஆங்காங்கே திரைக்கதை நொண்டியடித்து பின் வேகம் பிடிக்கிறது.
மியூசிக்கல் பிளேபாய் பிரேம்ஜியின் இசை படத்திற்கு பலம். குறிப்பாக அந்த இரு வேறு காலகட்டங்களை தன பின்னணி இசை மூலமே பார்வையாளர்களுக்கு சுலபமாக கடத்தி விடுகிறார். மற்ற தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்துமே சிறப்பாக உள்ளன. ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிளாக் டிக்கெட் நிறுவனம் 2021 இன் உச்சக்கட்ட கொரோனா காலத்தில் பார்த்து ரசிக்கும்படியான இந்த படத்தை தந்தத்துக்கு தாராளமாக பாராட்டலாம்
'மன்மத லீலை' வெங்கட் பிரபுவின் தனி முத்திரையுடன் வந்திருக்கும் படம் என்று சொன்னால் மிகையாகாது. ஒவ்வொரு முறையும் தனது ரசிகர்களுக்கு தன்னால் இயன்ற புதியதைக் கொடுக்க வேண்டும் என்ற அவரது வேட்கை மிகவும் பாராட்டத்தக்கது.
வி.பி.யின் புதிய முயற்சியில் வந்திருக்கும் திருப்பங்கள் நிறைந்த மன்மத லீலைக்கு தாராளமாக உங்கள் ஆதரவை தரலாம்.
- Read in English