வெள்ளத்தில் சிக்கிய தனுஷ் பட நாயகி! காப்பாற்றிய முதலமைச்சர்

  • IndiaGlitz, [Wednesday,August 21 2019]

தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்தின் நாயகியும் பிரபல மலையாள நடிகையுமான மஞ்சுவாரியர் இமாச்சல பிரதேச மாநிலத்தில் படப்பிடிப்பு ஒன்றுக்காக சென்றிருந்தபோது திடீரென வெள்ளத்தில் சிக்கி கொண்டார்.

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் 'கயிற்றம்' என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பிற்காக இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் அம்மாநிலத்தில் திடீரென பெய்த கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு மஞ்சுவாரியர் தங்கியிருந்த பகுதியை வெள்ள நீர் சூழந்தது. இதனையடுத்து மஞ்சுவாரியர் உள்பட சுமார் 200 பேர் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர்.

இதுகுறித்து மஞ்சுவாரியர் தனது சகோதரர் மதுவாரியரிடம் கூறி உடனடியாக தங்களை காப்பாற்ற ஏற்பாடு செய்யுமாறு உதவி கேட்டுள்ளார். மேலும் உணவு குடிநீர் கூட இல்லாமல் தவித்து வருவதாகவும் அவர் தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மதுவாரியர் மத்திய அமைச்சர் முரளிதரன் அவர்களுடன் பேசி மஞ்சுவாரியர் உள்பட வெள்ளத்தில் சிக்கிய படக்குழுவினர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க கூறியதாகவும், மத்திய அமைச்சர், இமாச்சல பிரதேச முதல்வரிடம் இதுகுறித்து பேசியதாகவும், இதனையடுத்து உடனடி நடவடிக்கை எடுத்த இமாச்சல பிரதேச முதல்வர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர் தற்போது பத்திரமாக மணாலி பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.