இந்திய அழகிக்கு உலக அழகி பட்டம்: 17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கிடைத்த கெளரவம்
- IndiaGlitz, [Sunday,November 19 2017]
2017ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்திற்கான போட்டியின் இறுதி சுற்றில் இந்தியாவை சேர்ந்த 20 வயது மனுஷி சில்லார் உலக அழகி பட்டத்தை வென்றார்.
சீனாவில் உள்ள சான்யா நகரில் 2017ஆம் ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி நடைபெற்றது. பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 அழகிகள் இடம் பெற்றிருந்தனர். இந்த இறுதிச்சுற்றில் இந்திய அழகி மனுஷி சில்லார் இந்த ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷ் செல்லார் மருத்துவக்கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அழகி ஒருவருக்கு உலக அழகி பட்டம் கிடைத்துள்ளதால் இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது
இதற்கு முன்னர் 1994ஆம் ஆண்டு ஐஸ்வர்யாராய், 1997ஆம் ஆண்டு டயானா ஹெய்டன், 1999ஆம் ஆண்டு யுக்தாமுகி, 2000ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா ஆகிய இந்திய அழகிகள் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.