சினிமாவில் ஆணாத்திக்கம் இருக்கு… 32 வருட சினிமா வாழ்க்கை குறித்து பேசிய மணிரத்னம் பட நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,May 09 2023]

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ திரைப்படம் மூலம் இந்தியா முழுக்கவே பிரபலமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் தன்னுடைய 32 வருட சினிமா வாழ்க்கை குறித்து கருத்து பகிர்ந்துள்ளார். இந்தக் கருத்துகள் தற்போது சமூகவலைத் தளங்களில் கவனம் பெற்றுள்ளன.

சௌதாகர் திரைப்படத்தின் மூலம் 1991 இல் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. இதற்கு பின்பு வெளிவந்த ‘பம்பாய்’ திரைப்படம் இவருக்கு புதிய வெளிச்சத்தைக் கொடுத்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ‘முதல்வன்’, ‘இந்தியன்’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘பாபா‘, உலகநாயகன் கமலுடன் ‘ஆளவந்தான்’ தனுஷ்ஷுடன் ‘மாப்பிள்ளை’ போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனிகவனத்தைப் பெற்றார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை மனிஷா கொய்ராலா சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ‘ஹீராமண்டி‘ எனும் வெப்தொடரில் நடித்து வருகிறார். இதுகுறித்து பேசிவரும் அவர் இந்த சினிமா வட்டாரம் ஆணாதிக்கம் சார்ந்தது என்றும் ஓடிடி தளங்கள் பெண்களுக்கு சிறந்த வாய்ப்புகளைத் தருகிறது என்றும் கூறியுள்ளார்.

ஃபர்ஸ்ட் போஸ்ட் நேர்காணலில் கலந்துகொண்ட அவர் ஓடிடி பிளாட்ஃபார்ம்கள் பெண்களுக்கு சிறந்த வாய்ப்புகளை தருகிறது. சினிமாவை விட இது எளிதாக இருக்கிறது. இப்போதெல்லாம் படப்பிடிப்பு நடத்துவது எளிதாக மாறிவிட்டது. நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் நோயினால் அவஸ்தைப்பட்டபோது ஆரோக்கியத்தின் மதிப்பை உணர்ந்தேன். விபத்துகளை தவிர்க்க முடியாது. ஆனால் நீங்கள் நிச்சயமாக அதிக பொறுப்புடன் இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

‘ஹீராமண்டி‘ வெப் தொடருக்குப் பிறகு அடுத்த வாய்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகை மனிஷா கொய்ராலா சிறிதுகாலம் ஓய்வுஎடுத்த பிறகு அடுத்தது குறித்து தெரியப்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.