இரோம் ஷர்மிளாவை தோற்கடித்த முதல்வரை ராஜினாமா செய்ய உத்தரவிட்ட கவர்னர்
- IndiaGlitz, [Monday,March 13 2017]
பிரபல சமூக சேவகியும், மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவருமான இரோம் ஷர்மிளாவை வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற வைத்து தோற்கடித்தவர் மணிப்பூர் முதல்வர் இபோபி சிங். இவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ளார். ஏன் என்பதை தற்போது பார்ப்போம்.
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இங்கு காங்கிரஸ் 28 இடங்களிலும் பாஜக 21 இடங்களையும் பெற்றது. இருப்பினும் தங்களுக்கு தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் உள்பட ஆட்சி அமைக்க தேவையான 32 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக பாஜக சார்பில் ஆட்சி அமைக்க ஆளுனர் நஜ்மா ஹெப்துல்லாவிடம் உரிமை கோரப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி முதல்வரான இபோபி சிங் அவர்களும் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக கடிதம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் ஏற்கனவே பாஜக, தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுத்துள்ளதால் முதல்வர் கொண்டு வந்த ஆதரவு கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய கவர்னர், உடனடியாக பதவியை ராஜினாமா செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். இதனால் விரைவில் அவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16 ஆண்டுகள் போராடிய ஒரு சமூக போராளியை தோற்கடித்த பாவம்தான் அவருக்கு முதல்வர் பதவி போக காரணம் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.