8 மணி நேர பயணம்: கொரோனா நோயாளியை அழைத்து சென்ற பெண் ஆட்டோ டிரைவர்
- IndiaGlitz, [Friday,June 12 2020]
கொரோனாவில் இருந்து குணமான பெண் ஒருவரை தனது ஆட்டோவில் 8 மணி நேரம் பயணம் செய்து அழைத்துச் சென்று அவருடைய இல்லத்திற்கு கொண்டு சென்ற பெண் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ள நிலையில் முதலமைச்சரும் பரிசு கொடுத்து பாராட்டியுள்ளதாக வந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மணிப்பூர் மாநிலத்தில் ஆட்டோ டிரைவராக இருப்பவர் Laibi Oinam என்ற பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனாவில் இருந்து குணமாகிய ஒருவரை ஆம்புலன்சு மூலம் வீட்டுக்கு அழைத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. அவருடைய இல்லம் வேறு மாவட்டத்தில் இருப்பதால் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது
இதனை அடுத்து பெண் ஆட்டோ டிரைவர் Laibi Oinam அந்த குணமான நோயாளியை தனது ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் இரவில் 8 மணி நேரம் பயணம் செய்ததாக தெரிகிறது. அவருடைய இந்த தைரியமான முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் அவரை மணிப்பூர் மாநில முதல்வர் பிரன்சிங் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்ததோடு 1.1 லட்சம் பரிசும் கொடுத்தார்
இதுகுறித்து முதல்வர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது , ‘ஆட்டோ டிரைவர் Laibi Oinam அவர்களின் தைரியத்தை பாராட்டி, 1.1 லட்சம் பரிசு கொடுத்தேன். கொரோனாவில் இருந்து குணமாக ஒரு பெண்ணை அவர் 8 மணி நேரம் பயணம் செய்து நடு இரவில் தைரியமாக அழைத்துச் சென்றுள்ளார். அவருடைய தைரியத்திற்கு எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.