எளிமையாக திருமணம் செய்து, திருமண செலவு பணத்தை நிவாரண நிதியாக அளித்த பிரபல நடிகர்

பிரபல நடிகர் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக நிச்சயிக்கப்பட்ட தேதியில் மிக எளிமையாக திருமணத்தை நடத்தி திருமண செலவிற்காக திட்டமிட்டிருந்த மிகப்பெரிய தொகை ஒன்றை முதல்வர் நிவாரண நிதிக்காக அளித்துள்ள தகவல் வெளிவந்து அனைவரின் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

விருது பெற்ற பிரபல மலையாள நடிகர் மணிகண்டன் ஆச்சாரி கடந்த சில மாதங்களுக்கு முன் கோவில் திருவிழா ஒன்றில் அஞ்சலி என்ற பெண்ணை பார்த்து காதலித்துள்ளார். அதன்பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் தேதி நிச்சயிக்கப்பட்டது இந்த நிலையில் திருமண தேதி நெருங்கிய நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திருமண தேதியை தள்ளி வைக்க இருதரப்பினர்களும் விரும்பவில்லை.

இதனை அடுத்து கோவிலில் மிக எளிமையாக திருமணத்தை முடிக்க முடிவு செய்தனர். இரு வீட்டார் தரப்பில் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் சமூகவிலகல் விதிகளை கடைபிடித்து திருமணத்தை நடத்தி வைத்தனர். இதன் பின்னர் திருமணத்திற்காக திட்டமிட்டிருந்த செலவு தொகையை முழுவதையும் கேரள முதல்வர் நிவாரண நிதிக்காக மணிகண்டன் ஆச்சாரி கொடுத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இது குறித்து நடிகர் மணிகண்டன் கூறியபோது கொரோனா வைரஸ் காரணமாக நாங்கள் மிக எளிமையாக எங்கள் திருமணத்தை முடித்துக் கொண்டோம். இருப்பினும் இந்த திருமணம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியானதாகவே இருந்தது. ஏனெனில் இந்த திருமணத்திர்காக திட்டமிட்டிருந்த தொகை முழுவதையும் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன். பிரமாண்டமாக திருமணம் நடைபெறவில்லை என்ற எந்த வருத்தமும் எங்களுக்கு இல்லை என்று கூறினார்.