மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்“ நடிகர்கள்… ஏற்று நடிக்கும் கதாபாத்திரம், தனித்தன்மைகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய சோழ ராம்ராஜ்ஜியத்தின் வரலாற்றைக் கூறும் நாவல் “பொன்னியின் செல்வன்”. சிறிது கற்பனை கலந்து எழுதப்பட்ட இந்தக் கதையை எம்.ஜி.ஆர் முதற்கொண்டு பலரும் திரைப்படமாக எடுக்க முயன்று இறுதியில் அது கனவாகவே போனது. இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் இந்தக் கதையைத் தனது கனவு திரைப்படமாக நினைத்து இயக்கி வருகிறார்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தக் கதையில் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இதனால் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க துவங்கிவிட்டது. அந்த வகையில் எந்த நடிகர்கள், எந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கின்றனர்? கூடவே அவர்களுக்கு அந்த கேரக்டர் பொருந்துமா? எனவும் எடைபோட துவங்கி விட்டனர்.
இதனால் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் யாரெல்லாம் இணைந்து இருக்கின்றனர். அவர்களின் கதாபாத்திரத்திரம் என்ன என்பது தற்போது அலசப்பட்டு வருகிறது. கதைப்படி சுந்தரச்சோழனின் பிள்ளைகளாக ஆதித்ய கரிகாலன், குந்தவி, அருள்மொழி வர்மன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரமாக இடம் பெற்றுள்ளனர். இந்தக் கதையில் வந்தியதேவன் கதாபாத்திரமும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
1.மணிரத்னம் இயக்கும் “பொன்னியின் செல்வன்“ திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் சுந்தரசோழன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். வரலாற்று கதைப்படி சோழ மன்னன் பராந்தச் சோழனுக்குப் பிறகு மூத்த மகன் கண்டராதித்தருக்கு வாரிசுகள் இல்லாததால் அவருடைய தம்பி அரிஞ்சயனுக்கு அரசப் பட்டம் கிடைக்கிறது. அரசன் அரிஞ்சயன் ஒரு வருடத்தில் இறந்துவிட அவருடை மகன் சுந்தரசோழனுக்கு பட்டம் சூட்டப்படுகிறது. இதற்கிடையில் வயதான கண்டராதித்தர் செம்பியன் மாதேவியை திருமணம் செய்து கொள்கிறார். இவருக்கு சேந்தன் அமுதன் எனும் வாரிசும் பிறக்கிறது.
ஆனால் தொடர்ந்து சுந்தரசோழனே நாட்டை ஆண்டு வருகிறார். சுந்தர சோழனின் இறப்புக்கு பிறகு ஆதித்த கரிகாலனுக்கு பதவி கிடைக்கிறது. இந்தச் செய்கைகளை அரசவையில் இருந்த பழுவேட்டரையர் இருவருமே விரும்பாமல் இருக்கின்றனர். இப்படித்தான் பொன்னியின் செல்வன் கதை ஆரம்பிக்கிறது. இந்தக் கதையின் தொடக்கத்திற்கு காரணமான சுந்தர சோழன் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க இருக்கிறார்.
2. நடிகர் சியான் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக இடம்பெறுகிறார். அந்த வகையில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு, பட்டத்து இளவரசர், 12 வயதிலேயே போர்க்களம் புகுந்தவர், யாருக்கும் அஞ்சாத படை வலிமையோடு எதிரிகளின் சூழ்ச்சியை வெல்ல வேண்டும் எனத் துடிப்பவர். கடும்கோபக்காரர் என்பதோடு நந்தினி மீது இவர் வைத்திருந்த சிறு வயது காதல், அரசப் பதவிக்காக இவர்மீது நடத்தப்படும் சூழ்ச்சி என ஒட்டுமொத்த கதையின் தூணாக இவர் கதாபாத்திரம் செயல்படுகிறது.
3. நடிகர் ஜெயம் ரவி இந்தக் கதையின் முக்கியக் கதாபாத்திரமான “அருள்மொழிவர்மன்” கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த அருள்மொழி வர்மனின் புனைபெயர்தான் “பொன்னியின் செல்வன்”. சோழ வம்சத்தின் மீது நடத்தப்படும் சூழ்ச்சிகளை புரிந்து கொண்டு நண்பர்களின் துணையோடு அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே இவரின் கதாபாத்திரம்.
19 வயதில் ஈழத்தின் மீது படையெடுத்து தன் படையில் இருந்த சிறிய வேளார் இறப்புக்கு நியாயம் தேடுகிறார். ஈழத்தில் நடக்கும் பல போர்களுக்கு தலைமை தாங்கி ஒட்டுமொத்த நிலத்தையும் சோழ சாம்ராஜ்ஜியத்தின் வசம் கொண்டு வருகிறார். இந்த நிலைமையில்தான் காஞ்சியில் இருந்து ஓலை வருகிறது.
அந்த ஓலையின்படி அருள்மொழி வர்மனை அரசனாக்கி விடலாம் என நினைக்கும் கரிகாலனின் கனவு மெய்ப்படுமா? இவர் தன் அண்ணனை அரச சூழ்ச்சியில் இருந்து காப்பாற்றுவாரா? என்பதே அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்திற்கு இருக்கும் பெரிய சவால். பொன்னியின் செல்வனாக வரும் இந்தக் கதாபாத்திரத்தின் மேல் சிறிய வேளார் மகள் “வானதி“ காதல் கொள்கிறாள்.
அதே நேரத்தில் தன்னை சிறிய வயதில் பொன்னி ஆற்றில் இருந்து காப்பாற்றிய பூங்குழலி மீது பொன்னியின் செல்வன் காதலில் விழுகிறான். ஆனால் இதைவிடவும் வந்தியதேவன் மீது அருள்மொழி வர்மனுக்கு இருக்கும் நட்புதான் இந்தக் கதையில் பெரும் ஈர்ப்பை கொடுக்கிறது.
4.இந்தப் படத்தில் குந்தவி கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறார். சுந்தர சோழனின் மகளாகவும், கரிகாலன் மற்றும் அருள்மொழி வர்மன் ஆகிய இருவரின் தமக்கையாக இருக்கும் இவர் ஒரு சிவ பக்தராக இருக்கிறார். கூடவே அரச காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வந்தியதேவன் மீது காதலில் விழுந்து தன்னுடைய எல்லையற்ற பாசத்தை காட்டுபவராக இந்தக் கதையில் இடம்பெறுகிறார்.
அரச வம்சத்தை சார்ந்த குந்தவிக்கும் அரசைக் கைப்பற்ற நினைக்கும் நந்தினிக்கும் இடையே இருக்கும் ஈகோ பிரச்சனையாகவும் இந்தப் பொன்னியின் செல்வன் கதையைப் பார்க்க முடியும். அந்த அளவிற்கு குந்தவியும் இந்தக் கதையில் முக்கிய இடம்பெறுகிறார்.
5.பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஒட்டுமொத்தக் கதையையும் பிணைத்துச் செல்லும் ஒரு கதாபாத்திரம் நந்தினி தேவி. இவருடைய அழகிற்கே ஈடு இணையே இல்லை எனும் அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் இடம் பெற்றிருக்கிறது. இத்தனை வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க இருக்கிறார்.
சிறிய வயதில் கரிகாலனின் மீது காதல் கொண்ட நந்தினி பின்னாட்களில் வீரபாண்டியனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த வீரபாண்டியன் செய்யும் அட்டூழியத்தை கட்டுப்படுத்த ஆதித்த கரிகாலன், அவர்மீது படையெடுத்து போகும்போது கடம்பூர் மாளிகையில் ஒளிந்து கொள்கிறான். அங்கிருந்த நந்தினி, கரிகாலனிடம் எவ்வளவோ கெஞ்சிய பிறகும் அவனை கொலை செய்து விடுகிறார். இந்தக் கொலைக்கு பழிவாங்கும் செயல்தான் “பொன்னியில் செல்வன்“ கதையாக பரிணமிக்கிறது.
பின்னர் தஞ்சை அமைச்சரவையில் உள்ள பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்துகொண்டு நந்தினி பின்னும் சூழ்ச்சி வலையில் அனைத்து கதைகளும் நகர்கிறது. அந்த வகையில் நந்தினி கதாபாத்திரம் இந்தப் திரைப்படத்தில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
6.வல்லவராயன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடிக்கிறார். பொன்னியின் செல்வன் நாவலைப் பொறுத்த வரைக்கும் வசீகரம் கொண்ட கதாபாத்திரம் இதுதான். நகைச்சுவைக்காக மட்டுமல்ல, அறிவுக்கூர்மை, சமயோசிதமாக தக்க நேரத்தில் முடிவெடுப்பது, மற்றவர்களின் சூழ்ச்சிகளை புரிந்து கொண்டு இளவரசர்களுக்கு உதவி செய்வது, நட்புக்கு இலக்கணமாக இருப்பது, தன்மீது காதலில் விழுபவர்களை நயமாகத் தட்டிக் கழிப்பது என வந்தியத்தேவன் கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது. இந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
7.பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் நடிக்கிறார். சோழநாட்டின் படைத்தளபதியான இவர் பேரழகியான நந்தினியைத் திருமணம் செய்து கொண்டு அவருடைய காதல் வலையில் சிக்கிக் கொள்கிறார். இவரைப் பயன்படுத்திக் கொண்டுதான் நந்தினி அரசுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை செய்ய ஆரம்பிக்கிறார்.
8.சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஹ்மான் நடிக்கிறார். சோழ வம்சத்தின் தனாதிபதியான இவர், நந்தினியின் சூழ்ச்சி வலையை கணக் கச்சிதமாகப் புரிந்து கொள்கிறார். இதனால் அண்ணன் பெரிய பழுவேட்டரையரைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். கூடவே சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு வரும் எதிர்ப்புகளை தன்னுடைய அறிவுத் திறமையால் எதிர்க்கொள்ளும் முக்கிய கதாபாத்திரமாக இவர் இடம்பெறுகிறார்.
9. படகோட்டி குடும்பத்தில் பிறந்த வலிமையான பெண்மணியாக வரும் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். சிறுவயது அருள்மொழி வர்மனை பொன்னி ஆற்றில் இருந்து காப்பாற்றிய அதே பூஞ்குழலி இலங்கை கடற்கரையில் மாட்டிக்கொள்ளும் அருள்மொழி வர்மனனையும், வந்தியதேவனையும் மிகத் திறமையாகச் செயல்பட்டு காப்பாற்றுவார்.
கூடவே கண்டதும் காதல் என அருள்மொழி வர்மனும், பூங்குழலியும் இணைந்து கொள்கின்றனர். பின்னர் கதை முழுவதும் அருள்மொழி வர்மனுக்குப் பக்கப் பலமாக பூஞ்குழலி கதாபாத்திரம் இடம் பிடிக்கிறது.
10. நடிகர் பிரபு இந்தத் திரைப்படத்தில் சோழப் பேரரசின் முதல் மந்திரியாக அனிருத்த பிரம்மராயர் எனும் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். கல்கி தான் எழுதிய நாவலிலேயே இந்தக் கதாபாத்திரத்தை சற்று புனைவுடன் படைத்து சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாதவாறு எழுதி இருப்பார். அந்த வகையில் நடிகர் பிரபுவின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
11.நடிகர் ஜெயராம் இந்தப் படத்தில் ஆழ்வார்க்கடியான் எனும் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இவர் முதல் மந்திரி அனிருத்த பிரம்மராயரின் ஒற்றனாக கதை முழுவதும் இடம்பெறுவார். இவர் ஒற்றனாக செயல்படுகிறார் என்பது கதை முழுக்கவே சொல்லப்படாமல் கதை நகர்ந்து செல்லும். அந்த வகையில் மிகவும் சுவாரசியமான மற்றும் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடிக்க இருக்கிறார்.
12. நடிகர் விக்ரம் பிரபு இந்தத் திரைப்படத்தில் சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கல்வி, ஒழுக்கம், பக்தியில் சிறந்தவராக இருக்கும் சேந்தன் அமுதன், வந்தியதேவனுக்கு நண்பனாகவும், பூங்குழலியை காதலிப்பவராகவும் இந்தப் படத்தில் இடம்பெறுகிறார்.
13. நடிகர் அஷ்வின் கக்குமனு இந்தப் படத்தில் கந்தமாறன் எனும் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சம்புவரையர் குல சிற்றரசனாக இருக்கும் இவர் கதையில் பல திருப்பங்களில் இடம்பெறுவார்.
14. நடிகர் கிஷோர் இந்தப் படத்தில் எதிர்மறை கதாபாத்திரமான தேவராளன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். பாண்டியர் வம்சத்தினருக்கு பக்கபலமாக இருக்கும் இவர் பழுவூர் இளையராணி நந்தினியின் சூழ்ச்சிக்கு உதவி செய்யும் முக்கிய கேரக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
15. நடிகர் லால் இந்தத் திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரமாக வரும் ரவிதாசன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். வீரபாண்டியன் கொலைக்கு பழிவாங்கும் நந்தினி தேவிக்கு உதவி செய்யும் இவர் ஆதித்த கரிகாலனை கொலை செய்யும் கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.
16. நடிகை பேபி சாரா இந்தப் படத்தில் வரும் நந்தினி (ஐஸ்வர்யா ராய்) யின் சிறுவயது ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுவயதில் நந்தினி, ஆதித்த கரிகாலனை காதல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தவிர நடிகை அதிதி ராவ், ரியாஷ் கான் போன்றோர் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர் என்பது போன்ற அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாக வில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments