மணிரத்னம் பட தோல்விக்கு வைரமுத்து பாடல் காரணமா?
- IndiaGlitz, [Wednesday,April 26 2017]
மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து இந்த மூன்று ஜாம்பாவன்கள் இணைந்து உருவாக்கிய பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. ஒருசில படங்கள் தோல்வி அடைந்தாலும், அந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் ஹிட் ஆகியிருக்கும். அந்த வகையில் இந்த மூவரும் இணைந்து தோல்வி அடைந்த ஒரு படம் 'திருடா திருடா', ஆனால் இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் சிறந்த பாடல்களாக உள்ளன.
முழுக்க முழுக்க ஜாலியான, இளமையான, ரொமான்ஸ் படமான 'திருடா திருடா' படத்தில் ஒரு காவியத்தனமான பாடலான 'ராசாத்தி என்னுசுரு என்னுதில்லை' என்ற பாடலை இணைத்தது தான் இந்த படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என்று மணிரத்னம் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து மணிரத்னம் மேலும் கூறியதாவது:
நான் ஒரு பொழுதுபோக்குப் படம் எடுத்துள்ளேன். மென்மையாக. சந்தோஷமாக படம் பார்த்துவிட்டுச் செல்லும்படி. ஆனால் வைரமுத்து அந்த பாட்டில் ஒரு காதல் காவியமே படைத்துவிட்டார்.
"காரை வீட்டுத் திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கையில, மஞ்சளை அரைக்கும்முன்னே மனசை அரைச்சவளே.."
என்கிற வரிகளையெல்லாம் கேட்டுவிட்டு மணிரத்னம் மகா காதல் காவியம் எடுத்துவிட்டார் என்று ரசிகன் உள்ளே வந்திருக்கிறான். அங்குப் பார்த்தால் படம் பொழுதுபோக்காக உள்ளது. இந்தப் படத்துக்கும் பாட்டுக்கும் உறவு இல்லையே என்று அவன் ஏமாந்துபோய்விட்டான்' என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த பாடலை முதல்முதலாகக் கேட்கும்போதே தெரியும், இது படத்தை விட்டு தாண்டியுள்ளது என்று. ஆனால் நான் அவரிடம் பாடலின் சூழல் சொன்னபோது, அவரை ஊக்கப்படுத்துவதற்காக கொஞ்சம் ஜாஸ்தியாகச் சொல்லிவிட்டேன். தேவதாஸ் போல ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டேன். அவரும் அதில் முழுவதுமாக இறங்கிவிட்டார். பாடலைக் கேட்டபிறகு இதைப் படத்தில் பயன்படுத்தக்கூடாது என்று புரிந்தது. ஆனால் இந்த மாதிரியான பாடலை விட்டுக்கொடுக்கவும் மனம் வரவில்லை. படத்தில் வைத்துவிட்டேன். சிலசமயம் இதுபோல நடந்துவிடும் என்றார்.
இந்த பாடல் குறித்து அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைரமுத்து கூறியபோது, 'பாத்திரம் அறிந்து பிச்சையெடு என்பதுபோல படம் அறிந்து பாட்டெழுது என்கிற பாடத்தை நான் கற்றுக்கொண்டேன் இந்தப் படத்தில் என்றார்.