மனிதம் வாழ்கிறது; ஒரேநாளில் 70 ஆயிரம் தொழிலாளர்களின் பசியைப்போக்கும் தன்னார்வ அமைப்பு!!!

  • IndiaGlitz, [Wednesday,April 22 2020]

 

மும்பை: கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புச் சாராத் தொழிலாளர்களின் பசியை போக்கும் விதமாக மும்பையில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் தற்போது மிக வேகமாக பணியாற்றி வருகிறது. கானா காஹியே. காம் என்ற பெயரில் ஒரு தன்னார்வ அமைப்பானது கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள கூலி மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்களின் பசியைப் போக்கும் விதமாக நாளொன்றுக்கு 70 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை தயாரித்து வழங்கி வருகிறது.

மும்பையில் அதிகளவு கூலித் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலைமையைப் பார்த்த சில நல்ல உள்ளங்கள் தற்போது இணையத்தில் கானா காஹியே. காம் என்ற தற்காலிக தொண்டு அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக நிதி பெறப்பட்டு தொழிலாளர்களின் பசியைப் போக்கும் விதமாக தொண்டாற்றி வருகின்றனர். நாளொன்றுக்கு 70 ஆயிரம் உணவுப் பொட்டலங்களைத் தயாரிப்பதற்காக ஆறு உணவகங்களில் உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மும்பையை ஒட்டியுள்ள பகுதிகளில் பசியால் வாடும் மக்களை கண்டறியும் வேலைகளிலும் இந்த அமைப்பு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

இந்தியாவில் முழுவதும் 1.3 பில்லியன் மக்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்ந்து வருகின்றனர். அதிலும் மும்பையில் குடிசை மக்கள், கூலித் தொழிலாளிகள், வீடில்லாத புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என இறுக்கமான நெருக்கடி நிலவிவருகிறது. இந்நிலையில் மார்ச் 23 இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இவர்களின் பசியைப் போற்றும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவாரணத் தொகைகளை வழங்கினாலும் அது தொழிலாளர்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை.

பசிக் கொடுமையால் குழந்தைகள் மண்ணைச் சாப்பிடுவதாக வெளியான செய்திகளை பார்த்துவிட்டு சில நல்ல உள்ளங்கள் கானா காஹியே. காம் என்ற பெயரில் அமைப்பை துவங்கி தற்போது பெரும்பாலான தொழிலாளர்களின் பசியை ஆற்றிவருகின்றனர். மார்ச் 29 அன்று 1,200 உணவுப் பொட்டலங்களுடன் ஆரம்பித்த இந்த அமைப்பு தற்போது, நாளொன்றுக்கு 70 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறது. பெருந்தொற்றுக் காலங்களில் அரசுகளைவிட இத்தகைய தொண்டு நிறுவனங்கள்தான் மக்களுடன் நேரடியாக மனிதத்தைக் காப்பாற்றி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.