விஜய்சேதுபதிக்கு எதிரான போராட்டம்: மண்டி நிறுவனம் விளக்கம்
- IndiaGlitz, [Wednesday,November 06 2019]
நடிகர் விஜய் சேதுபதி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் மண்டி என்ற நிறுவனத்தின் செயலி ஒன்றின் விளம்பரத்தின் சமீபத்தில் நடித்திருந்தார். இதற்கு வணிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே ஆன்லைன் வணிகத்தால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் விஜய்சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தால் தங்களுடைய வணிகம் மேலும் பாதிக்கப்படும் என்றும், விஜய் சேதுபதி இந்த விளம்பரத்தில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதற்கு விஜய்சேதுபதி தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வராததை அடுத்து நேற்று சென்னை ஆழ்வார்திருநகரியில் உள்ள விஜய் சேதுபதி அலுவலகத்தை சுமார் 200க்கும் மேற்பட்ட வணிகர்கள் முற்றுகையிட்டு விஜய்சேதுபதிக்கு எதிராக கோஷமிட்டனர். இதனையடுத்து போலீஸார் வணிகர்களின் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர்
இந்த விவகாரம் குறித்து விஜய் சேதுபதி தனது தரப்பு விளக்கத்தை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதிக்கு பதிலாக மண்டி நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. இந்த செயலியினால் விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் பயனளிக்கும் என்பதால்தான் இந்த விளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தார் என்றும், விஜய் சேதுபதி மீது குற்றம் சாட்டுவதும், அவரது புகழுக்கு களங்கம் விளைவிப்பதும் நியாயமற்றது என்றும், இந்த செயலியினால் வியாபாரிகளின் வருமான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், வியாபாரிகள் இதைப் புரிந்து கொண்டால் அனைவரும் பயன் பெறலாம் என்றும், அனைத்து வியாபாரிகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மண்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விளக்கத்தை வணிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.