ஒரு லாரியை அலேக்காகக் இழுத்து சாதனை படைத்த இரும்புத் தமிழன்… குவியும் பாராட்டு!!!

  • IndiaGlitz, [Thursday,November 26 2020]

 

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கண்ணன் சோழன் எனும் உடற்பயிற்சியாளர் ஒருவர் 91/2 டன் எடைக்கொண்ட லாரியை ஒருமுனை கயிற்றால் அதுவும் 90 மீட்டர் தூரத்திற்கு இழுத்து உலகச் சாதனை படைத்துள்ளார். இதனால் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கண்ணன் சோழன் முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 2020 இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொண்டு 3 ஆம் பரிசைத் தட்டிச் சென்றார். இதனால் வெண்கலக் கப்பை வென்று இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். அதையொட்டி உலகச் சாதனையைப் படைக்க விரும்பிய இவர் கின்னஸ் சாதனை குழுவிற்கு விண்ணப்பித்து லாரியை 40 மீட்டர் தூரத்திற்கு கையால் இழுத்து சாதனை படைக்க இருப்பதாகத் தெரிவித்து இருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் நாகப்பட்டினம் விரைந்த கின்னஸ் சாதனை குழு அவருக்கு இந்தப் போட்டியை நடத்தி இருக்கின்றனர்.

அதன்படி 91/2 டன் எடையுள்ள லாரியை பள்ளத்தில் இருந்து மேட்டிற்கு இழுக்க வேண்டும். லாரியின் ஒருமுனை ஒரு கம்பத்தில் கட்டப்பட்டு இருக்கும். இன்னொரு முனையை போட்டியாளர் இழுக்க வேண்டும். இப்படி 40 மீட்டர் தூரத்திற்கு இழுப்பதாக போட்டி தொடங்கப்பட்டது. இந்நிலையில் கண்ணன் சோழன் பள்ளத்தில் இருந்த 91/2 டன் எடைக்கொண்ட லாரியை 90 மீட்டர் தூரத்திற்கு ஒருமுனை கயிற்றால் இழுத்து புது சாதனையைப் படைத்து உள்ளார்.

இதனால் உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து இருப்பதாக உலகக் சாதனையாளர்கள் குழு அவருக்கு பாராட்டுத் தெரிவித்து சான்றிதழை வழங்கியுள்ளனர். மேலும் இந்தச் சாதனையைக் குறித்து கருத்துத் தெரிவித்த அந்தக் குழு உலகில் வேறுயாரும் இந்த நீளத்திற்கு இவ்வளவு எடையை இழுத்ததே இல்லை. அதுவும் குறைந்த உயரம் மற்றும் எடை கொண்ட கண்ணன் சோழன் இந்தச் சாதனையைப் புரிந்து இருப்பது வியப்பாக இருக்கிறது எனக் குறிப்பிட்டு உள்ளனர்.