1400 கிமீ ஸ்கூட்டியை அடுத்து 130 கிமீ மனைவியை சைக்கிளில் அழைத்து சென்ற முதியவர்
- IndiaGlitz, [Friday,April 10 2020]
ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியூரில் தவித்த மகனை 1400 கிமீ ஸ்கூட்டியில் அழைத்து வந்த வீரத்தாய் குறித்த செய்தியை காலையில் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது புற்றுநோயால் தவித்துக்கொண்டிருக்கும் மனைவியின் உயிரை காப்பாற்றுவதற்காக சைக்கிளிலேயே அவரை 130 கிமீ அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த முதியவர் ஒருவர் குறித்த தகவல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் அறிவழகன் என்பவரின் மனைவி 60 வயது மஞ்சுளா என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவர் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் ஆனால் அந்த வசதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தான் இருப்பதால் அங்கு அவரை அழைத்துச் செல்லுங்கள் என்றும் கூறினார்.
பேருந்து ரயில்கள் உள்பட அனைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் புதுச்சேரிக்கு எப்படி மனைவியை அழைத்துச் செல்வது என்று புரியாமல் அறிவழகன் தவித்தார். இருப்பினும் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே தனது பழைய சைக்கிளில் மனைவியை அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்.
கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு 130 கிலோமீட்டர் இருக்கும் நிலையில் வழியில் ஏதாவது பிரச்சனை வருமா? சைக்கிள் பஞ்சர் ஆகி விடுமா? என எதையும் யோசிக்காமல் மனைவியை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் அவர் கட்டிய வேட்டி மற்றும் துண்டுடன் சைக்கிளில் மனைவியுடன் கிளம்பினார்.
மாயவரம், சீர்காழி, சிதம்பரம், கடலூர் என 130 கிமீ இரவு முழுவதும் பயணம் செய்து அதிகாலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை அடைந்த அறிவழகன், அங்கு உள்ள மருத்துவர்களிடம் தனது மனைவியை காப்பாற்றுமாறு கெஞ்சினார். தற்போது ஊரடங்கு நேரத்தில் வெளிப்புற நோயாளிகளை ஜிப்மர் மருத்துவமனை அனுமதிப்பது இல்லை எனினும் 130 கிலோமீட்டர் மனைவியை தனது சைக்கிளில் அழைத்து வந்ததை கேட்டதும் நெகழ்ச்சி அடைந்த மருத்துவர்கள் அவரது மனைவிக்கு தேவையான சிகிச்சைகள் அளித்ததோடு தங்களது சொந்த செலவிலேயே உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்தனர். அது மட்டுமின்றி இருவரையும் ஆம்புலன்சில் இலவசமாக கும்பகோணத்திற்கு அனுப்பி வைத்தனர். தற்போது அறிவழகன் மனைவியின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மனைவியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 130 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்ற அந்த முதியவரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.