ஏ.டி.எம்-இல் பணம் எடுக்க ஆட்கள் தேவை. திருச்சியில் ஒரு வித்தியாசமான விளம்பரம்
- IndiaGlitz, [Sunday,December 18 2016]
பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பணத்தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க பொதுமக்கள் ஏடிஎம் மற்றும் வங்கி வாசலில் குவிந்துள்ளனர்.
பணம் எடுக்க வரிசையில் குறைந்தது நான்கு மணி நேரத்திற்கும் மேல் நிற்க வேண்டிய நிலை உள்ளதால் பொதுமக்களின் வேலைக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, பலர் மரணம் அடையும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சியை சேர்ந்த ஒரு கடைக்காரர் ஏடிஎம்-இல் பணம் எடுத்து கொடுக்க சம்பளத்திற்கு ஆட்கள் தேவை என்ற வித்தியாசமான விளம்பரத்தை கடை முன்பு போர்டாக மாட்டியுள்ளார். இதுகுறித்து அந்த கடை உரிமையாளர் கூறியபோது, 'என்னால் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலாது. மேலும் ஏடிஎம்களில் அதிக கூட்டமாக இருப்பதால் நெடுநேரம் ஆகிறது. இதனால் எனது கடையில் வியாபாரம் பாதிக்கிறது. எனவே ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுத்து கொடுக்க ஊதியத்துக்கு ஆள்கள் தேவை என விளம்பரம் வைத்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.
பணத்தட்டுப்பாடு முற்றிலும் நீங்கி இயல்பு நிலை திரும்ப இன்னும் ஒருசில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த கடைக்காரரை பின்பற்றி மேலும் பலர் விளம்பரம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.