சாகச பிரியரான காட்டு மனிதன் பேர் கிரில்ஸ்; தெரிவிக்க விடும் திரில் பட்டியல்
- IndiaGlitz, [Wednesday,March 04 2020]
முதுகு எலும்பு மூன்றாக உடைந்து மறுபடியும் எழுந்து நடக்கவே முடியாது என மருத்துவர்கள் கைவிரித்த ஒரு மனிதன், தனது சிறு வயது கனவை நிஜமாக்க முயற்சித்த கதைதான் பேர் கிரில்ஸின் கதை. அடர்ந்த காடுகள், வறண்ட பாலைவனம், படர்ந்த பனிப் பாறைகள் என எல்லா சூழல்களிலும் தன்னை உயிருடன் வைத்திருக்க முடியும் என நிரூபிக்கும் Man vs wild நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுக்க பிரபலம் அடைந்தவர் பேர் கிரில்ஸ்.
Man vs wild நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் வெறுமனே வணிகத்திற்காக நடத்தப் படுகிறது என விமர்சிப்பதும் உண்டு. ஆனால் குழந்தை பருவத்தில் இருந்தே கிரில்ஸ் த்ரில் அனுபவத்தை விரும்புவராகத் தான் இருந்திருக்கிறார். பள்ளியின் ஆரம்ப நாட்களில் குரங்கு என்றே செல்லமாக அழைக்கப் பட்டு இருக்கிறார். ஓடுவது, தாவுவது, குதிப்பது, இரவு நேரங்களில் வீட்டில் இருந்து காணாமல் போய் விடுவது என அத்தனை குரங்குத் தனங்களையும் செய்தவர் தனது 47 வயதிலும் தொடர்ந்து வருகிறார் என்பது தான் ஆச்சர்யம்.
கிரில்ஸ் 8 வயதாக இருக்கும் போது அவரது அப்பா ஒரு புகைப்படத்தை இவரிடம் காண்பிக்கிறார். அதில் எவரெஸ்ட் பிரகாசமான பனிப் பாறைகளால் ஜொலிக்கிறது. அந்த அனுபவத்தை கற்பனை செய்து பார்த்த கிரில்ஸ் “அப்பா நான் இதில் ஏறப் போகிறேன் என்கிறார். “சிரித்துக் கொண்டே அதெல்லாம் ரொம்ப கஷ்டம். எவரெஸ்ட்டில் ஏற வேண்டும் என்றால் நல்ல உடல் வலிமை இருக்க வேண்டும். நிறைய பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார் கிரில்ஸின் அப்பா. எவரெஸ்ட் மலையில் ஏற வேண்டும் என 8 வயதில் தொற்றிக் கொண்ட சாகச அனுபவம் அவரது வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. பின்னாளில் சாகசத்தை மட்டுமே காதலிக்கும் ஒரு மனிதராக கிரில்ஸ் உருவாகிறார்.
அயர்லாந்தில் மைக்கேல் - சாரா தம்பதியினருக்கு 7 ஜுன் 1974 இல் கிரில்ஸ் பிறக்கிறார். எட்வர்ட் கிரில்ஸ் எனப் பெயர் சூட்டப் படுகிறது. அவருக்கு முன் பிறந்த அக்கா லாராவுக்கு, ஒரு தங்கை வேண்டும் என்பதே பிடித்த விஷயமாக இருந்தது. ஆனால் பிறந்தது கிரில்ஸ். பெயர் சொல்லி அழைக்க விரும்பாத லாரா, டெட்டி பேர் என்றே செல்லமாக அழைக்கிறார். இந்த டெட்டி பேரில் உள்ள பேர் தான் பின்னாளில் அவருடைய பெயராக மாறி இருக்கிறது.
வளரும் பருவத்தில் கிரில்ஸ் செய்த அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்ல. வீட்டில் வளரும் ராக் ரக நாய்களை படுத்தி எடுத்தி இருக்கிறார். நாய்கள் பதிலுக்கு இவரது வாய், மூக்கு என பலமுறை கொதறி இருக்கிறது. சிறு வயதிலேயே கராத்தேவில் பிளாக் பெல்ட்டையும் வாங்கியிருக்கிறார். இந்தப் பயிற்சி வாழ்நாள் முழுவதும் கைக் கொடுத்து வருகிறது.
ஒரு முறை தனது அப்பாவுடன் சைப்ரஸ் நாட்டில் சுற்றுலா சென்றிருந்தார் கிரில்ஸ். பனி சறுக்கில் மாட்டிக் கொண்ட தனது அப்பாவிற்கு மிகச் சரியாக வழியைக் காட்டி அழைத்து வந்திருக்கிறார். அவருடைய முதல் சாகசம் அன்றைக்கே ஆரம்பமாகி இருக்கிறது.
தனது 17 ஆவது வயதில் கடற்கரையில் மது அருந்து விட்டு தனியாக திரும்பிய கிரில்ஸ் தனது சாகச ஆர்வத்தால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக ஓடத் தொடங்கினார். பாய்ஸ் பட பாணியில் இவரது செயலை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இவரது சாகச உணர்வு அதிரிகத்தது. இயற்கையை ரசித்தல், ஊர் சுற்றுதல், சாகசமான நிகழ்வுகளை செய்தல் என தனது வாழ்க்கையை ரசித்த கிரில்ஸ் ஒரு முதுகு பையை மட்டுமே எடுத்துக் கொண்டு பல நாட்களில் பயணத்தை ஆரம்பித்து இருக்கிறார்.
ஒரு தடவை தேவாலயக் கூண்டின்மீது ஏறி இரவு முழுவதும் அங்கேயே உறங்கி இருக்கிறார். இத்தனை சாகசத்திற்கும் கிரில்ஸின் தாத்தா கதைகளும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றன. இராணுவ வீரராக பணியாற்றிய அவரது தாத்தாவின் கதை சாகச போதையைத் தந்திருக்கிறது. அந்தக் கதைகளை மீண்டும் மீண்டும் கேட்டு வளர்ந்த கிரில்ஸ் வேலைக்குப் போக வேண்டும் என்றால் அது இராணுவமாகத் தான் இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்.
SAS (Special Air Service) சேவைக்காக தன்னை இணைத்து கொண்ட கிரில்ஸ் அதில் 3 வருடம் பணியாற்றுகிறார். 1996 இல் தென் ஆப்பிரிக்காவின் சாம்பியாவில் ஒரு பாராசூட் ஸைகைவ்வில் கலந்து கொள்கிறார். 16 ஆயிரம் அடியில் இருந்து கீழே விழும் போது பாராசூட் பழுதாகிறது. அத்தனை உயரத்தில் இருந்து கீழே விழுந்ததும் முதுகு தண்டு 3 துண்டுகளாக உடைகிறது.
தீவிரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப் படுகிறது. பல மாதங்கள் இருட்டு அறைகளிலேயே தனது வாழ்க்கையை கடத்திய கிரில்ஸ்க்கு ஒரு பேர் அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது மருத்துவர்கள் இனிமேல் உன்னால் எழுந்து நடக்கவே முடியாது எனக் கைவிடுகின்றனர். உடைந்து போன கிரில்ஸ் அப்படியே இருட்டு அறையில் தனது வாழ்க்கையை கடந்து விட ஒருபோதும் நினைக்கவில்லை. அயராத முயற்சியினால் தனது பழைய நிலையை அடைகிறார்.
விபத்து நடந்து 18 மாதங்கள் கடந்த பின்பு, தான் 8 வயதில் கனவு கண்ட அதே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கிறார். இந்தச் சாதனையை நிகழ்த்தும் போது கிரில்ஸ்க்கு வெறும் 23 வயதே ஆகிறது. உயிர் பிழைப்பதே கடினம் எனச் சொன்ன மருத்துவர்கள் அவரது சாதனையைப் பார்த்து ஆச்சரியத்தில் அசந்து போகின்றனர்.
மேலும், இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்தவர்களுள் இவரும் ஒருவர் என்ற பெருமையும் வந்து சேர்கிறது. இதற்காக 1998 இல் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடிக்கிறார்.
பின்பு தனது சாகசங்களை வரிசையாக அரங்கேற்ற தொடங்குகிறார் கிரில்ஸ். மலையேற்றத்தில் பங்கு கொண்டு தனது காலை இழந்த நண்பனுக்கு உதவி செய்யும் விதமாக தேம்ஸ் ஆற்றில் நிர்வாணமாக 22 கி.மீ. ஆபத்தான பயணத்தை நடத்திக் காட்டுகிறார். தேம்ஸ் நதியில் பயணிப்பதற்கு அவர் தேர்ந்தெடுத்த படகுதான் உலகம் முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தனது வீட்டில் இருந்த சாதாரண பாத் டப்பை வைத்துக் கொண்டு இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டுகிறார் கிரில்ஸ்.
பின்னர் இதுவரை மனிதர்களின் கால் தடமே பதியாத பென்சிங், நார்வே போன்ற பல இடங்களுக்குப் பயணம் செய்து உலகின் பார்வையில் தனது முத்திரையைப் பதித்தார். கிரில்ஸின் மூச்சுக் காற்றில் கூட Adventure இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு இயற்கையுடனும் தனது சாகச உணர்வுடனும் ஒன்றிவிட்டவராக ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவே கிரில்ஸ் கருத்துத் தெரிவிக்கிறார்.
உலக நாடுகளில் ஒபாமா முதல் பிரதமர் மோடி வரை இவரது சாகச நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். தனித் தீவில் விட்டு விட்டால் கூட புல், பூண்டை வைத்து வாழ்ந்து விடக் கூடிய நல்ல அனுபவத்தையும் அசாத்தியமான திறமைகளையும் கொண்டிருக்கிறார். 2008, 2009 என இருமுறை விஷ தேனிக்கள் கடித்ததால் சிகிச்சையும் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது. உயிருக்கு ஆபத்தான விஷப் பூச்சிகள் அவரைக் கடித்து அபாயகரமான நிலையில் உயிர் தப்பித்ததாகக் கூறப்படுகிறது.
முதலில் Tressure iland நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் இன்று உலகம் முழுவதும் டிஸ்கவரி சேனலின் Man vs wild மூலம் கலக்கி வருகிறார். 11 புத்தகங்களை எழுதி சிறந்த எழுத்தாளராகவும் தனது முத்திரையைப் பதித்து இருக்கிறார். அவரது Mission survival விற்பனையில் சக்கைப் போடு போட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. கிரில்ஸ் அட்லாண்டிக் முதல் ஆர்டிக் வரை திறந்த வெளியில் பயணம் செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கிரில்ஸ்க்கு இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது. காரணம் மலையேற்ற பயிற்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் தான் அவர் முதலில் பயிற்சி எடுத்திருக்கிறார். அந்த உற்சாகத்தில் இந்திய இராணுவத்தில் சேர்ந்து கொள்ளவும் விருப்பம் தெரிவித்தார் என்பதே கூடுதல் சுவாரசியம். இவரது சாகச நிகழ்ச்சியின் போது அன்னை தெரசாவையும் ஒருமுறை சந்தித்து இருக்கிறார்.
தனது சாகசத்தில் பலமுறை பனி மலைகளையும், பனி புயல்களையும் மிக எளிதாகக் கடந்து ஊடகத்தில் பார்வையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார். சமீபத்தில் வானத்தில் 7600 அடிக்கு மேலே ஆக்ஸிஜன் பையை வைத்துக் கொண்டு ஏர் பலூனில் இருந்தபடியே டின்னர் பார்டியைக் கொண்டாடினார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
சமீபத்தில் எவரெஸ்ட் கனவை மீண்டு உயிப்பித்த கிரில்ஸ் பாரா ஜெட், பாரா மோட்டர் துணையோடு எவரெஸ்ட்டின் சிகரத்தில் பறந்து உலகையே வியப்பில் ஆழ்த்தினார். 29,500 அடி உயரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் இவர் பறந்த காட்சிகளை சேனல் 4 படம் பிடித்தது. இந்த முயற்சியில் 200 முறை பாரா சூட்டில் இருந்து கிரில்ஸ் குதிக்க வேண்டி இருந்தது. ஆனால் ஒரு முறை கூட தனது உடைந்த போன முதுகு தண்டைப் பற்றியோ பழைய நினைவுகளைப் பற்றியோ அவர் கவலை கொள்ள வில்லை என்பதே குறிப்பிட வேண்டியது.
பேர் கிர்ல்ஸ் நிகழ்ச்சிகளைப் பற்றி அவ்வபோது சர்ச்சைகள் வருவதும் உண்டு. கிரில்ஸ் 2006 இல் வெனிசுலாவின் காட்டுப் பகுதியில் தனித்து விடப் பட இருக்கிறார் எனற செய்தி உலகம் முழுவதிலும் பேசு பொருளானது. ஒரு தனி நபருக்கு எந்த உதவியும் இல்லாமல் இப்படி செய்வது குற்றமாகக் கருதப்படும் என விமர்சனங்கள் எழுந்தன. சர்ச்சை கிளம்பிய நிலையில் சேனல் 4 நிகழ்ச்சியை சில வாரங்களுக்கு நிறுத்தியது. மனித உரிமை மீறல் என்ற குற்றச் சாட்டை அடுத்து இது சாகச நிகழ்ச்சி மட்டுமே. ஆவணப் படம் அல்ல என சேனல் 4 விளக்கம் அளித்து.
இச்சம்பவத்திற்கு பின்பே தனிமனித பாதுகாப்பு என்ற விதியின் படி கிரில்ஸ்க்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப் படுகிறது என நிகழ்ச்சிகளில் தெளிவாக அறிவிப்பு வெளியாகியது. ஒருமுறை பிரேசில் காடுகளில் அலைந்து திரிந்த போது, கிரில்ஸ் ஊஞ்சல் கட்டி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 3 ஓநாய்கள் அவரை சூழ்ந்து கொண்டன. உடனே சுதாரித்த கிரில்ஸ் ஓரு ஓநாயின் கழுத்தை சுழற்றி அடித்து இருக்கிறார். ஒரு ஓநாயின் கழுத்தை கடித்தே கொன்றிருக்கிறார். இச்சம்பவத்தைப் பார்த்த அவரது பாதுகாவலர்கள் வியப்பில் ஆழ்ந்து போனதாகத் தெரிவித்து உள்ளனர்.
2004 இல் Running wild with bear grylls என்ற நிகழ்ச்சியை தொடங்கினார் கிரில்ஸ். அதில் டென்னிஸ் வீரர் ரோஷர் பெடரர் உடன் முதல் நிகழ்ச்சியை நடத்தி உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பிக் காட்டினார். பின்னர் ஒபாமாவுடன் அலாஸ்காவுக்கு சென்று கரடி ஒன்று விட்டுச் சென்ற மீனை இருவரும் சாப்பிட்டனர். கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடன் கிரில்ஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சியை 360 கோடி பேர் ரசித்ததாகத் தகவல் கூறப்படுகிறது.
கிரில்ஸின் சாதனையை பாராட்டி The scout association இவருக்கு தலைமை சாரணர் பதவியை வழங்கி சிறப்பித்து இருக்கிறது. இவரது புகழை பாராட்டி இங்கிலாந்து ராணி பக்கிங்காம் அரண்மனையில் விருந்து அளித்து சிறப்பு செய்தார். உலகம் முழுவதும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு கொண்டாடப் படுகிறார். இயற்கை பேரிடர் மற்றும் சீற்றக் காலங்களில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை குறித்து பயிற்சி தருவதற்காக ஒரு அகாடமியையும் நடத்தி வருகிறார்.
கிரில்ஸ் பயன்படுத்துவ்து போன்ற கத்தி பல மில்லியன் கணக்கில் விற்று தீர்ந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. பேர் கிர்ல்ஸ் கிட்டும் சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். கிரில்ஸ் தன்னைப் பற்றி “எனக்கு பயமே கிடையாது என்பது இல்லை; உடனடியாக அந்தப் பயத்தில் இருந்து வெளிவருவதற்கு தேவையான முயற்சிகளை செய்வதே” என்னுடைய நோக்கமாக இருக்கும் எனத் தெரிவித்து இருக்கிறார்.
பேர் கிரில்ஸின் வார்த்தைகளில் “நரகத்திற்குள் இருந்தாலும், அது தான் வாழ்க்கை என்று நின்று விடாதீர்கள் , தொடர்ந்து செல்லுங்கள்” அப்போது வாழ்க்கை வசப்படும் என்பதும், “முடியாது என்ற வார்த்தையை யார் சொன்னாலும் நம்பாதீர்கள்” என்பதும் அனைவரும் பின்பற்ற வேண்டியவையாக இருக்கின்றன.
ஒரு நாடோடி வாழ்க்கை, ஆனால் தனக்கு பிடித்த இயற்கையுடன் நடமாடும் வாழ்க்கை. ஆபத்தான தருணங்கள் பல இருந்தாலும் அதை எல்லாம் தனது முயற்சியால் தடுத்துவிட்டு நகர்ந்து சென்றே கொண்டிருக்கும் மனிதராக பேர் கிர்ல்ஸ் இருக்கிறார். முதுகு உடைந்த நிலையில் அப்படியே இருந்துவிடாமல் தனது சாகச மோகத்தால் வெற்றியை அடைகிறார். எந்தவொரு குறிக்கோளும் ஆர்வத்தைத் தாண்டி மோகமாக மாறுகிறபோது வெற்றி அடைய முடியும் என்பதற்கு இவரே சிறந்த எடுத்துகாட்டு.