முகக்கவசத்தில் வைத்து தங்கம் கடத்திய பலே கில்லாடி… சுங்கத் துறையிடம் மாட்டிக்கொண்ட பரபரப்பு!!!cc
- IndiaGlitz, [Thursday,October 01 2020]
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மாதம் கேரளாவில் நடைபெற்ற தங்கக்கடத்தல் சம்பவத்தில் அம்மாநிலத்தின் பல அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறது. இதனால் கேரளாவின் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுங்கத்துறை கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில் கேரளாவில் உள்ள கரிபுரம் விமான நிலையத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஒரு விமானம் வந்திருக்கிறது. அந்த விமான பயணிகளை சோதனையிட்ட சுங்கத்துறை அதிகாரிகள் பயணி ஒருவர் முகக்கவசத்தில் வைத்து 40 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததைக் கண்டுபிடித்து உள்ளனர். இதனால் அந்தப் பயணி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் உத்தரகன்னட மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதால் அதில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்திருக்கிறார். N95 வால்வு மாஸ்கின் துளையில் மறைத்து வைக்கப்பட்ட தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். அதன் மதிப்பு ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது.