செல்போனை விழுங்கிய விசித்திர மனிதன்… பின்பு நடந்த டிவிஸ்ட்!
- IndiaGlitz, [Tuesday,September 07 2021]
சிறிய வயது குழந்தைகள் சில்லரை நாணயம், சிறிய சிறிய பொருட்களை விழுங்கிய கதைகளை எல்லாம் கேட்டு இருப்போம். ஆனால் வளர்ந்துவிட்ட இளைஞர் ஒருவர் நோக்கியோ செல்போனை விழுங்கிய சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான கோசாவா நாட்டிலுள்ள ஓல்டு பிரிஸ்புனா எனும் பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் வேண்டுமென்றே நோக்கியோ செல்போனை விழுங்கி இருக்கிறார். இதனால் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்குச் சென்ற அந்த இளைஞர் நான் செல்போனை விழுங்கி இருந்தேன். அது ஜீரணம் ஆகவில்லை எனக்கூறி மருத்துவர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.
இதையடுத்து இளைஞருக்கு ஸ்கேன் செய்துபார்த்த மருத்துவர்கள் வயிற்றில் செல்போன் இருப்பதைத் தெரிந்து கொண்டு அறுவைச் சிகிச்சை செய்து அதை வெளியேற்றி உள்ளனர். வயிற்றில் இருந்து செல்போனை எடுத்து விட்டாலும் பேட்டரியில் உள்ள அமிலம் கசிந்துவிட்டதால் இளைஞரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.
மேலும் அந்த இளைஞர் விழுங்கியது கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நோக்கியோ 3310 மாடல் என்பதையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து எதற்கு விழுங்குவானேன்? இப்படி உயிருக்கு போராடுவானேன்? எனப் பலரும் இளைஞரைப் பார்த்து கிண்டல் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.