முஸ்லீம் சிறுமியை தத்தெடுத்த வாலிபருக்கு 16 கத்திக்குத்து
- IndiaGlitz, [Saturday,June 30 2018]
முஸ்லீம் சிறுமி ஒருவரை தத்தெடுத்த நபர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று 16 இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த பாப்பாலால் ரவிகாந்த் என்பாவர் கோயில்களுக்கு வர்ணம் பூசும் பணியை செய்து வருகிறார். கடந்த 2007ஆம் ஆண்டு ஐதராபாத்தில் வெடிகுண்டு சம்பவத்தால் பெற்றோரை இழந்த சானியா என்ற முஸ்லீம் பெண் குழந்தையை ரவிகாந்த் மற்றும் அவரது மனைவியும் தத்தெடுத்தனர். இந்துக்கள் பெரும்பாலும் வசிக்கும் அந்த பகுதியில் முஸ்லீம் குழந்தையை தத்தெடுத்த இந்த தம்பதியினர்களுக்கு கடும் எதிர்ப்புகள் இருந்து வந்தது.
இந்த நிலையில் சானியாவை அந்த பகுதி இளைஞர்கள் அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாகவும் இதனை ரவிகாந்த் கண்டித்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவிகாந்த் தனது வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் ரவிகாந்தை கத்தியால் சரமாரியாக குத்தினர். மொத்தம் 16 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு அந்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதனையடுத்து ரத்தவெள்ளத்தில் மிதந்த ரவிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து ரவிகாந்த் மற்றும் மனைவி கூறும்போது எத்தனை எதிர்ப்புகள், பயமுறுத்தல்கள் வந்தாலும் சானியாவை கைவிடப்போவதில்லை என்றும் சானியாவும் எங்கள் குழந்தைகளில் ஒருவர் என்றும் கூறினர். இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ரவிகாந்தை தாக்கிய மர்ம நபர்களை கண்டுபிடித்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.