அபராதம் கேட்டதால் ஆத்திரம்: சொந்த பைக்கையே கொளுத்திய போதை ஆசாமி!
- IndiaGlitz, [Friday,September 06 2019]
செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்தியாவின் பல மாநிலங்களில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து போதையில் வாகனம் ஓட்டுதல், ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டுவது, சாலை விதிகளை மீறுவது போன்றவைகளுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது. பலசமயம் வண்டியின் விலையை விட அபராதத்தொகை அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த ராகேஷ் என்பவர் நேற்றிரவு போதையில் பைக் ஓட்டியதாக பிடிபட்டார். வழக்கம்போல் ரூ.100 அல்லது ரூ.200 அபராதம் இருக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அவரிடம் லைசென்ஸ், ஆர்சி புக் எதுவும் இல்லை, போதையிலும் வண்டி ஓட்டியுள்ளதால் மொத்தமாக சேர்த்து ரூ.25 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என போலீசார் அதிர்ச்சி கொடுத்தனர்.
இதனால் அதிர்ச்சியில் போதை தெளிந்த அந்த ஆசாமி, தன்னால் இவ்வளவு பெரிய தொகை அபராதம் கட்ட முடியாது என்று கூறியதோடு, ஆத்திரத்தில் பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து பைக் மீது தெளித்து வண்டியை கொளுத்திவிட்டார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்து பின்னர் தீயணைப்பு துறையினர்களுக்கு தகவல் அளித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது