லைவில் தற்கொலை முயற்சி… தக்க சமயத்தில் காப்பாற்றிய ஃபேஸ்புக் நிறுவனம்!
- IndiaGlitz, [Monday,June 07 2021]
டெல்லியில் வசித்து வந்த 39 வயதான நபர் ஒருவர் ஃபேஸ்புக் லைவிலேயே தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இதைப் பார்த்த ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவில் இருந்து உடனடியாக டெல்லி சைபர் கிரைம் போலீஸ்க்கு தகவல் கொடுத்து இருக்கிறது.
அதோடு அந்த நபரின் இருப்பிடத்தையும் ஃபேஸ்புக் நிறுவனம் கண்டுபிடித்து கூறியிருக்கிறது. இதனால் சைபர் கிரைம் போலீசார் டெல்லி காவல் துறைக்கு தகவல் கொடுத்து அந்த நபரை தக்க சமயத்தில் காபாற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த வியாழக்கிழமை டெல்லியின் துவர்கா பகுதியில் உள்ள பலம் எனும் கிராமத்தில் வசிக்கும் 39 வயதான நபர் தனது அறையின் உட்கதவை தாழிட்டுக் கொண்டு ஃபேஸ்புக் லைவிலேயே தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அந்த வீடியோவில் கதவிற்கு வெளிப்புறம் அவருடைய குழந்தைகளின் அழுகுரலும் கேட்கிறது. ஆனால் தற்கொலைக்கு முயன்ற அந்த நபர் அதிக ரத்தப்போக்குடன் மயங்கி விழுகிறார். இதனால் பதறிப்போன ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்கள் டெல்லி சைபர் போலீசுக்கு தகவல் கொடுத்து அவரின் இருப்பிடத்தையும் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து அதிகாலை 2 மணி அளவில் டெல்லி போலீசார் அந்த நபரின் வீட்டிற்கு சென்று ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த நபரை மீட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி உள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.