ஹெல்மெட்டுக்குள் சுருண்டு கிடந்த பாம்பு..தலையில் சுமந்தபடி 11 கி.மீ பயணித்த ஆசிரியர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மாமலை கிராமத்தைச் சேர்ந்தவர், கே.ஏ.ரஞ்சித். சம்ஸ்கிருத ஆசிரியரான இவர் அங்குள்ள பள்ளிகளில் தனியாகப் பாடம் நடத்தி வருகிறார். அவர் தன் வீட்டிலிருந்து தினமும் காலையில் 8.30 மணிக்குப் புறப்பட்டு கண்டநாட் பகுதியில் உள்ள செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்துவார்.
அந்தப் பள்ளியில் பாடம் முடிந்த பின்னர், 6 கி.மீ தூரத்தில் இருக்கும் திருப்புணித்துறை ஆர்.எல்.வி பள்ளியில் பாடம் நடத்துவார். வழக்கமான இந்தப் பணிக்காக இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட அவர் பாடங்களை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவதற்காகக் கிளம்பியிருக்கிறார்.
இரு சக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டச் சென்றபோது வால் போல எதுவோ தொங்கியுள்ளது. பதறிப்போன அவர் பார்த்தபோது பாம்பு ஒன்று ஹெல்மெட்டின் உள்ளே இருக்கும் பஞ்சுப் பகுதியில் பதுங்கியிருப்பதைக் கண்டுள்ளார். பள்ளியில் உள்ள நண்பரின் உதவியுடன் அதை வெளியில் எடுத்தபோது, இறந்தநிலையில் கிடந்துள்ளது.
கே.ஏ.ரஞ்சித்தின் வீட்டின் அருகே சிறிய குளம் உள்ளது. அதன் அருகில் புதர் மண்டிக் கிடந்துள்ளது. அங்கிருந்து ஹெல்மெட்டுக்குள் பாம்பு ஏறியிருக்க வேண்டும் என்று அவர் சந்தேகிக்கிறார். ஹெல்மெட்டில் பாம்பு இருப்பது தெரியாமலே 11 கி.மீ தூரம் பயணம் செய்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
பாம்பைத் தலையில் சுமந்தபடி பயணித்ததால் பயமடைந்த அவர் உடனடியாக நண்பரின் உதவியுடன் தாலுகா மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டன. அதில், அவரைப் பாம்பு கடிக்கவில்லை என்பது தெரியவந்தது. அதன் பின்னரே அவர் நிம்மதியடைந்தார். ஹெல்மெட்டுக்குள் இறந்து கிடந்த பாம்பு கட்டுவிரியன் வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. கேரளாவில் அதை வெள்ளிக்கீற்றன், சங்குவாயன், எட்டடிவீரன் எனப் பல பெயர்களில் அழைக்கிறார்கள். இந்த வகை பாம்பு கடித்தால் தலையில் விஷம் ஏறி மரணம் நிகழக்கூடும் என்கிறார்கள். பாம்புக் கடியிலிருந்து தப்பிய ரஞ்சித், பாம்பு ஏறிய ஹெல்மெட்டைத் தீ வைத்துக் கொளுத்தினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments