பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து தற்கொலை… ஆன்லைன் சூதாட்டத்தால் நேர்ந்த கொடுமை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் வியாபாரி ஒருவர் பல லட்சங்களை இழந்து அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புதுவையின் வில்லியனூர் அடுத்த கோர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயக்குமார் (36). இவர் அப்பகுதியில் செல்போன் ரீசார்ஜ் செய்யும் விநியோகஸ்தர் தொழிலைச் செய்து வந்திருக்கிறார். மேலும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டுகள் இவருக்கு பழக்கமாக ஆரம்பித்து இருக்கிறது. ஆரம்பத்தில் பொழுது போக்குவதற்காக விளையாட ஆரம்பித்த இவர் அதில் கொஞ்சம் பணத்தையும் வென்றிருக்கிறார். இதனால் அந்த விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடி ஒருகட்டத்தில் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாகவே மாறியிருக்கிறார். அதனால் பல லட்சக் கணக்கான பணத்தை சூதாட்ட விளையாட்டில் இழந்து இருக்கிறார்.
பின்பு பணம் இல்லாத காரணத்தால் மனைவியின் நகையை அடமானம் வைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தொடர்ந்து இருக்கிறார். அடுத்து தொழிலுக்காக வைத்திருந்த பணம், நண்பர்களிடம் வாங்கின கடன் என அனைத்தையும் இந்த சூதாட்ட விளையாட்டில் இழந்திருக்கிறார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் விஜயக்குமாரை திரும்ப செலுத்துமாறு நெருக்கடி கொடுத்து உள்ளனர். இதுதொடர்பாக விஜயக்குமாருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.
அதுபோன்ற ஒரு வாக்குவாதத்தில் வீட்டை விட்டு கிளம்பிய விஜயக்குமார் அருகில் உள்ள ஒரு ஏரிக்கரையில் தீப்பிடித்து எரிந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடனை திருப்பி செலுத்த முடியாததால் விஜயக்குமார் தனது மனைவிக்கு வாட்ச் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் தனது வாட்ச் அப்பில் அரசாங்கம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் சூதாட்ட விளையட்டுகளில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது அதேபோன்ற நடவடிக்கை தமிழகத்திலும் தொடருமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com