மனைவி, மாமியாரை கொன்ற நபரின் 67 பக்க கடிதம்: மொத்த குடும்பத்தையும் போட்டுத்தள்ள திட்டம்
- IndiaGlitz, [Wednesday,June 24 2020]
பெங்களூரைச் சேர்ந்த சார்ட்டட் அக்கவுண்டண்ட் ஒருவர் மனைவியை கொலை செய்துவிட்டு அவருடைய மாமியார் வீட்டுக்குச் சென்று மாமியாரையும் சுட்டுக் கொலை செய்துவிட்டு 67 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பெங்களூரை சேர்ந்த சாட்டர்ட் ஆக்கவுண்டன்ட் அமித் அகர்வால். இவருக்கும் இவருடைய மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். ஆனால் மனைவியின் தாயார் உட்பட அவருடைய குடும்பத்தினர் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் இரண்டு வருடங்களாக விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது
இந்த நிலையில் விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் மனைவி மற்றும் அவருடைய மொத்த குடும்பத்தையும் கொலை செய்ய திட்டமிட்டார். இதனை அடுத்து முதலில் பெங்களூரில் இருந்த மனைவியை கொலை செய்துவிட்டு தனது பத்து வயது மகனை அழைத்துக்கொண்டு கொல்கத்தாவில் உள்ள மனைவியின் அம்மா வீட்டிற்கு சென்றார். கொல்கத்தா விமான நிலையத்தில் இறங்கியவுடன் அவர் தனக்கு வேண்டியவர் ஒருவரை வரவழைத்து அவருடன் தனது 10 வயது மகனை பத்திரமாக பார்த்து கொள்ளும்படி ஒப்படைத்தார்
அதன்பின் மாமியார் வீட்டிற்கு சென்ற அமித் அகர்வால் முதலில் மாமனாரை கொலை செய்ய துப்பாக்கியால் சுட்டார். ஆனால் அவர் நூலிழையில் உயிர் தப்பித்து வெளியே ஓடி கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டார். இதனை அடுத்து உள்ளே இருந்த மாமியாரையும் கொலை செய்துவிட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்
முன்னதாக அவர் தனது மைத்துனனுக்கு போன் செய்து வீட்டுக்கு வரச் சொன்னதாகவும், ஆனால் அவர் வர முடியாது என்று கூறியதால் அவர் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கொல்கத்தா போலீசார் விசாரணை செய்து அமித் அகர்வால் மற்றும் அவருடைய மாமியார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அவருடைய கடிதத்தின் மூலம் பெங்களூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவருடைய மனைவியின் உடலும் கைப்பற்றப்பட்டது. மேலும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது
இதனை அடுத்து அமித் அகர்வால் எழுதிய 67 கடிதம் ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதில் தனது மனைவி மற்றும் அவருடைய மொத்த குடும்பத்தையும் எப்படி கொலை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு அதை விரிவாக எழுதியுள்ளார். ஆனால் அவருடைய திட்டத்தில் மாமனார் மற்றும் மைத்துனன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது