பன்றியின் இதயம் மனிதனுக்கு பொருத்தப்பட்டதா? மருத்துவ உலகில் புது திருப்பம்!
- IndiaGlitz, [Tuesday,January 11 2022]
அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு மருத்துவ உலகில் புது சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது.
இதய நோயால் பாதிக்கப்பட்ட 57 வயதான டேவிட் பென்னர் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் மேரிலேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு இதய உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் மாற்று உறுப்பு கிடைக்காமல் அவர் தவித்து வந்துள்ளார். இதையடுத்து பன்றியின் இதயத்தை பென்னருக்கு பொருத்துவது என மருத்துவர்கள் முடிவுசெய்துள்ளனர்.
பன்றியின் உறுப்புகளும் மனிதர்களின் உறுப்புகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருப்பதை விஞ்ஞானிகள் இதற்குமுன்பே பலமுறை நிரூபித்து உள்ளனர். ஆனால் பன்றியின் இதயம் மனிதரின் உடலுக்கு நேரடியாகப் பொருந்துமா? என்ற சந்தேகம் மருத்துவ உலகில் இருந்து வந்தது. இந்நிலையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியாக மாற்றம் செய்த மருத்துவர்கள் அதை வெற்றிகரமாக டேவிட் பென்னருக்கு பொருத்தி உள்ளனர்.
இதையடுத்து டேவிட் பென்னர் தற்போது உடல்நலம் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் பன்றியின் இதயத்தை மனிதர்களுக்கு பொருத்தி அதில் வெற்றிப்பெற்ற மேரிலேண்ட் மருத்துவர்களுக்குத் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் எதிர்காலத்தில் இதேபோன்று பன்றியின் சிறுநீரகத்திலும் மரபணு ரீதியாக மாற்றம்செய்து அதை மனிதர்களுக்குப் பொருத்துவது குறித்து விங்ஞானிகள் ஆய்வுசெய்து வருவதாகக் கூறப்படுகிறது.