எமனாக மாறிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் மிஷின்: வாலிபர் பரிதாப மரணம்
- IndiaGlitz, [Tuesday,January 30 2018]
மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்று அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரை இழந்துள்ள பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது.
மும்பையை சேர்ந்த ராஜேஷ் என்ற 32 வயது இளைஞர் தனது சகோதரியின் மாமியார் லட்சுமி சோலங்கி அவர்கள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு நலம் விசாரிக்க சென்றார். மேலும் நோயாளியான லட்சுமி சோலங்கிக்கு அவர் செயற்கை சுவாசத்திற்காக கையில் ஆக்சிஜன் சிலிண்டரையும் எடுத்து சென்றுள்ளார்
நோயாளி சிகிச்சை பெற்று வந்த அறையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இருந்ததால் அங்கு ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லலாமா? என்று மருத்துவரிடம் ராஜேஷ் கேட்டுள்ளார். அவரிடம் மருத்துவர் மற்றும் வார்டுபாய் ஆகியோர், எம்.ஆர்.ஐ ஸ்கேன் எந்திரம் தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும், அதனால் சிலிண்டரை எடுத்து செல்லலாம் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் உண்மையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எந்திரம் செயல்பாட்டில் இருந்ததால் ராஜேஷ் ஆக்சிஜன் சிலிண்டருடன் எந்திரத்தின் காந்தத்தன்மையால் இழுக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் கையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் லீக் ஆக தொடங்கியது. இதனால் மொத்த ஆக்சிஜனும் அவரது உடலுக்குள் சென்றது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜேஷ் மிக ஆபத்தான நிலையைச் சென்றடைந்தார்
நிலைமையின் விபரீதத்தை தாமதமாக உணர்ந்த மருத்துவர்கள் உடனடியாக ராஜேஷ் உடலில் சென்ற அதிகப்படியான ஆக்சிஜனை வெளியேற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். ஆனால் பத்து நிமிடங்களில் ராஜேஷ் பரிதாபமாக மரணம் அடைந்தார்.
இதுகுறித்து ராஜேஷின் உறவினர்கள் கூறும்போது, 'மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் நிர்வாகத்தின் கவனக்குறைவால் தான் இந்த துக்கமான சம்பவம் நடந்துள்ளதாகவும், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் அருகே ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்து செல்லக்கூடாது என்று அவரிடம் யாராவது கூறியிருந்தால் அவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்றும் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேஷின் மரணத்திற்கு காரணமானவர் என்று கூறப்படும் டாக்டர் சவுரப், வார்டு பாய் வித்தல் சவான், ஆயா சுனிதா சுர்வே ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மரணம் அடைந்த ராஜேஷின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.