க்யூவில் நிற்பதற்கு ஆயிரக்கணக்கில் சம்பளம்… வித்தியாசமாக அசத்தும் இளைஞர்!
- IndiaGlitz, [Thursday,January 20 2022]
மனித வாழ்க்கையில் நாம் தினம்தோறும் மருத்துவமனை, தியேட்டர், ரயில், விமானம் என்று பல விஷயங்களுகாக வரிசையில் நிற்கவேண்டி இருக்கிறது. இப்படி வரிசையில் நிற்கும்போது வரும் சலிப்பைத் நம்மால் தவிர்க்கவே முடியாது. இதே விஷயத்தை தொழிலாக மாற்றிக் காட்டியிருக்கிறார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
பிரிட்டனில் ஃபுல்ஹாம் எனும் பகுதியில் வசித்துவருபவர் ஃப்ரெட்டி பெக்கிட். வரலாறு சார்ந்த கதைகளை எழுதிவரும் இவர் அவ்வபோது பணத்திற்காக சிறுசிறு தொழில்களை பகுதிநேரமாகச் செய்து வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் தன்னால் எந்தெந்த வேலைகளை எல்லாம் செய்ய முடியும் என ஆன்லைனில் வரிசைப்படுத்திய இந்த இளைஞர் “உங்களுக்காக வ்ரிசையில் என்னால் நிற்கமுடியும்“, தியேட்டர் ஷாப்பிங் மால், விமானம், ரயில் என எந்த டிக்கெட் கவுண்டராக இருந்தாலும் அதில் உங்களுக்காக நின்று சேவை செய்யமுடியும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுபோன்ற வேலைகளுக்கு அந்த இளைஞர் 20 பவுண்ட்களை கட்டணமாகக் குறிப்பிட்டு உள்ளார். இதைப்பார்த்த அந்த ஊர் செல்வந்தர்கள், குழந்தைகளைப் பராமரித்து வருவோர், முதியவர்கள் என போட்டிப் போட்டுக்கொண்டு பெக்கிட்டை ஆன்லைனில் புக் செய்துள்ளனர். இதனால் பெக்கிட் தற்போது மணிக்கணக்காக வரிசையில் காத்திருக்கும் தொழிலை செய்துவருகிறார். மேலும் தினமும் நாள்தோறும் 160 பவுண்ட்களை சம்பாதித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார். இது இந்திய மதிப்பில் 16,000 என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரிசையில் நிற்பதெல்லாம் ஒரு தொழிலா என்று நமக்கெல்லாம் கிண்டலாக இருக்கலாம். ஆனால் அந்த இளைஞர் நாள்தோறும் சம்பாதிக்கும் பணத்தைப் பார்த்தால் நமமால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது என்பதும் நிதர்சனமான உண்மை.