கடலில் அலைச்சறுக்கு விளையாட்டு: மகளை காப்பாற்ற சென்ற தந்தை பரிதாப பலி!
- IndiaGlitz, [Tuesday,December 08 2020]
ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மகளை காப்பாற்ற சென்ற தந்தை பலியான சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி நகரை சேர்ந்தவர் பாலாஜி. ஐடி துறையில் பணிபுரிந்து வரும் இவரும் இவருடைய மகளும் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று பாலாஜியும் அவருடைய மகளும் அலைச்சறுக்கு விளையாட சென்னை திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தனர். அப்போது காற்று பலமாக வீசுவதால் ராட்சச அலைகள் இருப்பதாகவும், எனவே அலைச்சறுக்கு விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அங்கிருந்த மீனவர்கள் எச்சரித்தனர்.
ஆனால் மீனவர்களின் எச்சரிக்கையையும் மீறி மகளுடன் பாலாஜி அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார். அப்போது திடீரென வந்த ராட்சச அலை ஒன்று பாலாஜியின் மகளை இழுத்துச் சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலாஜி உடனே மகளை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் குதித்தார். இதை பார்த்த அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக தந்தை மகள் ஆகிய இருவரையும் மீட்க கடலுக்குள் குதித்தனர்.
ஆனால் அவர்களால் மகளை மட்டுமே மீட்க முடிந்தது. இதனை அடுத்து ஒரு சில மணி நேரம் கழித்து பாலாஜியின் உடல் கரை ஒதுங்கியது. தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத அவருடைய மகளின் அழுகை கல் நெஞ்சையும் கரைய வைக்கும் வகையில் இருந்தது. இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என்ற எச்சரிக்கையை மீறிய பாலாஜியின் பரிதாபமாக மரணம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.