கொரோனா பார்ட்டியில் பங்கேற்ற இளைஞர் பரிதாப பலி!
- IndiaGlitz, [Monday,July 13 2020]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வந்தாலும் இன்னும் ஒரு சிலர் கொரோனா வைரஸ் என்பதே வதந்தி என்றும் கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் அனைத்தும் பொய் என்றும் கூறி வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வெறும் வதந்தி என்பதை குறிப்பிடும் வகையில் ஒருசில இடங்களில் ‘கொரோனா பார்ட்டி’ நடந்து வருகின்றது என்பதும் இந்த பார்ட்டியில் பங்கேற்றதால் கொரனோ தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு பரிசு கொடுப்பதாக அறிவிப்பும் வெளி வந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் என்ற நகரை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் என்பது வெறும் வதந்தி என்பதை தீவிரமாக நம்பிய இவர் அந்த பார்ட்டியில் பங்கேற்ற நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதனை அடுத்து அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக இந்த இளைஞர் மரணத்திற்கு முன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ‘நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். என்னை போல் யாரும் தவறு செய்ய வேண்டாம், கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள்” என்று வீடியோ மூலம் அவர் பொது மக்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதனை அடுத்து இனிமேலாவது கொரனோ என்பது வதந்தி என்பதை தெரிவிக்கும் வகையில் பார்ட்டிகளை யாரும் நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த இளைஞரின் மரணம் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.