கொரோனா நோயாளிகளுக்காக ஆட்டோவை ஆம்புலஸ்ஸாக மாற்றிய நல்ல உள்ளம்!
- IndiaGlitz, [Friday,April 30 2021]
கொரோனாவின் தீவிரத்தால் தற்போது படுக்கை தட்டுப்பாடு மட்டுமல்ல, பல மாநிலங்களில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இதனால் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காமல் பல கொரோனா நோயாளிகள் உயிரை விடுவதும் அதேநேரத்தில் இறந்த கொரோனா நோயாளிகளின் உடல்களை அப்புறப்படுத்துவதற்கு போதுமான ஆம்புலன்ஸ் சேவை இல்லாமலும் பலர் தவித்து வருகின்றனர்.
இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையின் அவுரங்காபாத் நகரில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் கொரோனாவால் இறந்த 22 உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்ற அவலம் அரங்கேறியது. அதோடு ஆந்திரா மாநிலத்தில் பலமுறை ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இறந்த உடல்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்லும் அவலமும் நிகழ்ந்தது.
இப்படி இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் தற்போது ஆம்புலன்ஸ் பற்றாக்குறையும் ஏற்பட்டு இருக்கிறது. இப்படியான நெருக்கடியில் மத்தியப் பிரதேசம் போபாலை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
இதற்காக சாதாரண ஆட்டோ ஓட்டுநரான ஜாதவ் கான் என்பவர் தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து ஆட்டோவை ஆம்புலன்ஸ் வடிவத்திற்கு மாற்றி இருக்கிறார். மேலும் தனக்கும் நோயாளிகளுக்கும் உள்ள தூரத்தை உறுதிச் செய்வதற்காக நடுவில் கண்ணாடி ஷுல்டையும் பொருத்தி இருக்கிறார். கொரோனா நோய்த்தொற்று தற்போது தீவிரம் அடைந்து வரும் நிலையில் கடந்த 20 நாட்களாக இதுபோன்ற உதவிகளை போபால் பகுதிகளில் ஜாதவ் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுவரை கொரோனாவின் தீவிரத்தால் தவித்து வந்த 9 உயிர்களை இவர் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை பார்த்த பலரும் உதவி எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு மனது மட்டுமே வேண்டும் என ஜாதவ் கானை பாராட்டி வருகின்றனர்.