மேற்குவங்கத்தில் ஜிஎஸ்டியில் தள்ளுபடி: திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி
- IndiaGlitz, [Monday,July 03 2017]
ஜிஎஸ்டி வரி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரியால் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மேற்குவங்க மாநில அரசு திரையரங்க கட்டணத்தில் மாநில அரசின் சார்பில் தள்ளுபடி வழங்கியுள்ளது.
ரூ.100 கட்டணத்திற்குள் என்றால் 18% ஜிஎஸ்டி வரியும், ரூ.100 கட்டணத்திற்கு மேல் என்றால் 28% ஜிஎஸ்டி வரியும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இவற்றில் பாதி அதாவது 9% மற்றும் 14% மாநில அரசுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாநில அரசின் 9% வரியில் 7% வரியை தள்ளுபடி செய்வதாகவும் அதேபோல் 14% வரியில் 12% தள்ளுபடி செய்வதாகவும் மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது. இந்த சலுகை பெங்காலி, நேபாளி மொழி திரைப்படங்களுக்கு மட்டும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்க அரசின் இந்த அறிவிப்பால் அம்மாநில திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக ஜிஎஸ்டிக்கு முன் ஒரு திரையரங்கின் கட்டணம் ரூ.80 என்று வைத்துக்கொண்டால் தற்போதைய டிக்கெட்டின் விலை என்ன தெரியுமா?
திரையரங்க கட்டணம் ரூ.80.00
மத்திய அரசின் ஜிஎஸ்டி 9% ரூ.7.20
மாநில அரசின் ஜிஎஸ்டி 9% ரூ.7.20
மொத்தம் ரூ.94.40
இவற்றில் மாநில அரசின் தள்ளுபடி 7% ரூ.5.60
தள்ளுபடி போக டிக்கெட் கட்டணம் ரூ.88.80
எனவே பழைய கட்டணத்தை விட வெறும் ரூ.8.80 மட்டுமே புதிய கட்டணத்தில் உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்க அரசை போல தமிழக அரசும் தமிழ்ப்படங்களுக்கு மட்டும் இதே முறையை பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.