'மாமன்னன்' படத்தில் பணிபுரிந்த முக்கிய நபர் உயிரிழப்பு.. இறப்புக்கு இதுதான் காரணமா?

  • IndiaGlitz, [Tuesday,November 28 2023]

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’மாமன்னன்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த முக்கிய நபர் ஒருவர் திடீரென காலமாகி விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’கர்ணன்’ மற்றும் ’மாமன்னன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் மாரிமுத்து. தூத்துக்குடியை சேர்ந்த இவர் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சென்னை வந்த நிலையில் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

‘கர்ணன்’ ’மாமன்னன்’ ஆகிய இரண்டு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில் திடீரென அவருக்கு லேசான மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் லேசான மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிகப்படியான புகைப்பழக்கம் காரணமாகத்தான் அவருக்கு மூச்சு திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். சினிமாவில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற கனவுடன் இருந்த மாரிமுத்துவுக்கு வயது பெறும் 30 தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு ’மாமன்னன்’ படக்குழுவினரையும் திரையுலகினரையும் பெரும் சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது.