பாலியல் குற்றச்சாட்டு: பிரபல மலையாள நடிகர் கைதாகி சில நிமிடங்களில் விடுதலை..!

  • IndiaGlitz, [Tuesday,September 24 2024]

கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதன் காரணமாக சில நடிகர்கள் கைதாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், பிரபல நடிகர் கைதாகி, சில நிமிடங்களில் ஜாமீனில் வெளி வந்து விட்டதாக கூறப்படுகிறது.

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததாக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்ட பின்னர், அந்த அறிக்கையின் அடிப்படையில் நடிகைகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், மலையாள பிரபல நடிகர் முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

கைதாகும் முன் நடிகர் முகேஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டது.

அதே நேரத்தில், முகேஷ் முன்ஜாமீன் கோரி ஏற்கனவே மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், எர்ணாகுளம் நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் முகேஷுக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.