14 வயதில் நான் சந்தித்த இனவெறி: 'மாஸ்டர்' நாயகியின் அதிர்ச்சி பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் இனவெறி காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் திரையுலக பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்க்கையில் நடந்த இனவெறி நிகழ்வுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ‘மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் தனக்கு 14 வயதில் நிகழ்ந்த நிறவெறி, இனவெறி குறித்த நிகழ்வு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
“எனக்கு 14 வயதாக இருக்கும் போது எனது நெருங்கிய நண்பர் ஒருவரை அவரது தாயார் டீ குடிக்கவே விடமாட்டார். ஏனெனில் டீ குடித்தால் தோலின் நிறம் கருப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஒருநாள் அந்த நண்பர் தனது அம்மாவிடம் டீ கேட்டபோது, அவரது அம்மா என்னை காண்பித்து, நீ டீ குடித்தால் அவளை போல் கருப்பாக மாறிவிடுவாய் என்று கூறியது எனக்கு அதிர்ச்சியை அளித்தது.
எனது நண்பர் ஒரு அழகான மகாராஷ்டிரா பையன். நான் மாநிறமுள்ள ஒரு மலையாளி. இதுநாள் வரை என்னுடைய நிறத்தை ஒப்பிட்டு யாரும் பேசியது இல்லை என்பதால் எனக்குள் குழப்பம் ஏற்பட்டது. நமது சமுதாயத்தில் இனவெறி, நிறபேதம் என்பது சாதாரணமாகவெ இருந்து வருகிறது என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன். கருப்பாக இருப்பவர்களை காலா என்று அழைப்பதும், கருப்பு நிறம் கொண்டவர்களை மதராஸி என்று அழைப்பதும் வட இந்தியர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. தென்னிந்தியர்கள் என்றாலே அனைவரும் கருப்புதான் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
கருப்பின மக்கள் அனைவரையும் நீக்ரோக்கள் என்றும் அழகற்றவர்கள் என்றும், வெள்ளை நிறத்தில் இருப்பவர்கள் அனைவரையும் அழகானவர்கள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றனர். உலகளாவிய இனவெறி பற்றி நாம் பேசும் போது நம் வீடுகளிலும், நண்பர் வட்டங்களிலும் நம்மைச் சுற்றியும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இனவெறி மற்றும் நிற பேதத்தை ஒழிப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் அன்பான நபராக இருப்பதுதான் உங்களை அழகான மனிதராக்கும். உடலின் நிறம் அல்ல. இவ்வாறு மாளவிகா கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments