கமல் கட்சியின் அண்டை மாநில தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டிவிட்டது என்பதும் பலி எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்துக்கும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இவர்களில் ஒருசிலர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பதும் தெரிந்ததே. தமிழகத்தில் கூட ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏவும், வசந்தகுமார் எம்பியும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுவை மாநில தலைவரான சுப்பிரமணியன் என்பவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 70. கமல் கட்சியின் அண்டை மாநில தலைவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

புதுவை மாநில மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் அவர்கள் மறைவிற்கு கமல் இரங்கல் தெரிவித்து கூறியதாவது: களத்தில் முன்னிற்கும் என் அன்பிற்கினிய நண்பரும், நம் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவருமான டாக்டர். M. A. S. சுப்பிரமணியன் அவர்களின் மறைவு நமக்கும் பேரிழப்பு. நம்பிக்கையின் மொழி பேசும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்கட்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.