நிலச்சரிவினால் மண்ணிற்குள் புதைந்த அரசுப் பேருந்து… பதற வைக்கும் கோரக்காட்சி!
- IndiaGlitz, [Wednesday,August 11 2021]
இமாச்சல் பிரதேசத்தின் கின்னௌர் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலச்சரிவுக்குள் சிக்கி அரசுப் பேருந்து ஒன்று மண்ணிற்குள் புதைந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 40 பேரின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது.
இமாச்சல் மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழையினால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் Peckong –Peo Shimla நெடுஞ்சாலை அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் அரசுக்குச் சொந்தமான பேருந்து ஒன்று மண்ணிற்குள் புதைத்துள்ளது. இந்தப் பேருந்தில் 40 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சமீபகாலமாக இமாச்சலம் பகுதியில் இதுபோன்ற நிலச்சரிவுகள் அதிகரித்து இருக்கின்றன. அந்த வகையில் இன்று மதியம் நடைபெற்ற இந்த நிலச்சரிவும் பெருத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் அரசுப் பேருந்தைத் தவிர சிறுசிறு வாகனங்களும் இந்த நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.