நடிகர் நாகார்ஜூனன் ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து
- IndiaGlitz, [Tuesday,November 14 2017]
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவிற்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்கும் பணியில் 5 தீயணைப்பு வாகனங்களில் இருந்து வந்துள்ள தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ண ஸ்டுடியோவை பழம்பெரும் நடிகரும், நாகார்ஜூனனின் தந்தையுமான நாகேஸ்வரராவ் கடந்த 1975ஆம் ஆண்டில் கட்டினார். தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் உருவாகும் படங்களில் படப்பிடிப்பு இந்த ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு ஒரு திரைப்படத்திற்காக போடப்பட்டிருந்த செட் ஒன்றில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. இந்த தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அருகில் இருந்த இரண்டு திரைப்படங்களுக்காக போடப்பட்டிருந்த செட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தீவிபத்து நடந்தபோது செட்டுக்களில் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.