பணமோசடியில் ஈடுபட்ட மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி… 7 ஆண்டு சிறை!

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தியும் சமூக செயற்பாட்டாளருமான ஆஷிஷ் லதா ராம்கோபினுக்ககு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென் ஆப்பிரிக்கா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மகாத்மா என அழைக்கப்பட்ட காந்தியடிகளின் இரண்டாவது மகன் மணிலால் காந்தி. இவருடைய மகள் இலா காந்தி. பல்வேறு சமூக செயல்களுக்கான அமைதி விருதை பெற்றவர். மேலும் 1994-2004 வரை தென் ஆப்பிரிக்க பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவருடைய மகள்தான் ஆஷிஷ் லதா ராம்கோபின் (56). இவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து அங்கேயே வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்படுகிறார்.

இந்நிலையில் லதா ராம்கோபின் கடந்த 2015 ஆம் ஆண்டு லாப பகிர்வு முறையில் கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றில் முறைகேடான ஆவணங்களைக் காட்டி 6.2 மில்லியன் ராண்ட் கடன் பெற்றதாகவும் அந்தக் கடனுக்கான அனைத்து ஆவணங்களும் பொய்யானவை என்றும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக டர்பன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கிற்கான தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டு உள்ளது.

அதில் லதா ராம்கோபினுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவம் தென்ஆப்பிரிக்க வாழ் இந்தியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.