ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்த மேலும் ஒரு மாநிலம்
- IndiaGlitz, [Saturday,April 11 2020]
இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மத்திய அரசு அதிரடியாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 14ஆம் தேதி முடிவுக்கு வர உள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களும் பிரதமருக்கு வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் ஏற்கனவே பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகிய இரு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவர்கள் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்றும் இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடி அவர்களிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டதாகவும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பஞ்சாப், ஒரிசாவை அடுத்து ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ள மூன்றாவது மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் தான் மிக அதிக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது என்பதும், அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1276 என்பதும் 110 பேர் வரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவை அடுத்து கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்திலுள்ள தமிழகம், ஊரடங்கு உத்தரவு நீடிப்பது குறித்து அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.