மகாராஷ்டிராவில் கனமழையால் நிலச்சரிவு.....! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.....!
- IndiaGlitz, [Friday,July 23 2021]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதில், இதுவரை 36 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள தலியே மற்றும் சுடர்வதி கிராமங்களில் இதுவரை 36 நபர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 4 நாட்களாக அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ரைகாட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் உள்ளிட்ட கரையோர மாவட்டங்களில், சென்ற 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், பல கிராமங்களும், சிறிய நகரங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக வஷிஸ்தி, ஜக்புடி மற்றும் கஜலி போன்ற நதிகளால் அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகங்களில் பேசிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே கூறியிருப்பதாவது, ரைகாட் மாவட்டத்தில் இதுவரை 36 நபர்கள் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவில் பலர் மாட்டியிருக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் மீட்புப் பணிகளிலும் முடக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி முகமை, 'தலியே கிராமத்தில் 32 நபர்களும், சுடர்வதி கிராமத்தில் 4 நபர்களும் இறந்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கனமழை பெய்யும் மாவட்டங்களிலும், நீர் அதிகமுள்ள இடங்களிலும், வீடுகளில் சிக்கியுள்ளவர்களையும் மீட்க பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையும் உதவி செய்வதாக கூறியுள்ளது. சாலைகள் சேதமடைந்துள்ளதால், செல்போன் டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் எத்தனை நபர்கள் உயிரிழந்தார்கள் என்ற தகவல்கள் இன்னும் தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.