விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்… தக்காளி விற்று ஒரே வாரத்தில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்
- IndiaGlitz, [Saturday,July 15 2023]
இந்தியா முழுக்கவே தக்காளியின் விலை கடந்த சில தினங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர வர்க்கம் முதற்கொண்டு பிரபலங்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தக்காளியின் விலை ஏற்றத்தால் ஒருசில விவசாயிகள் லட்சக் கணக்கில் சம்பாதித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் எப்போதாவது நடக்கும் இந்த அதிசய சம்பவம் ஊடகங்களில் பேசு பொருளாகி வருகிறது.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள ஜுன்னா எனும் பகுதியில் வசித்துவரும் விவசாயி ஒருவர் கடந்த ஒரே வாரத்தில் தக்காளி விற்று 1.5 கோடி ரூபாய் பணம் ஈட்டியுள்ளார். இதுகுறித்த தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
ஜுன்னே பகுதியில் வசித்துவரும் விவசாயி துக்காராம் பாகோஜி கயாகர் என்பவருக்கு 18 ஏக்கர் நிலம் இருந்துவந்த நிலையில் அதில் 12 ஏக்கர் நிலத்தில் தனது மகன் ஈஸ்வர் கயாகர் மற்றும் மருமகள் சோனாலியின் உதவியுடன் தக்காளி பயிரிட்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் பயிரிட்ட நிலையில் கடந்த வாரம் முதல் அதில் உற்பத்தியை பெற்று வருகிறார். இதனால் 13,000 தக்காளி பெட்டிகளை விற்பனை செய்து இதுவரை அவர் 1.5 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
புனே அடுத்து ஜுன்னா பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி விளைச்சலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதில் ஒருசில விவசாயிகள் தற்போது லட்சக்கணக்கில் சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 12 ஏக்கர் பரப்பளவில் தக்காளி விளைச்சல் செய்துவரும் துக்காராம் தற்போது நாராயண்கஞ்ச் பகுதியில் இயங்கிவரும் வோளாண் விளைபொருள் சந்தையில் தனது பொருட்களை விற்பனை செய்துவருகிறார். அந்த வகையில் 20 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டிக்கு தற்போது 2,500 விலை வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் 900 பெட்டிகளை விற்ற அவர் ஒரே முறையில் 18 லட்சத்தை வருமானமாக ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக தக்காளி விற்பனை செய்துவரும் துக்காராம் தனது விளைபொருட்கள் முதலில் ரூ.1,000 இல் ஆரம்பித்து தற்போது 2,500 வரை விற்பனை ஆகிவருவதாகத் தெரிவித்துள்ளார். அதாவது துக்காராம் தற்போது விற்கும் ஒரு கிலோ தக்காளியின் விலை குறைந்தபட்சம் ரூ.125 என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயி ராஜசேகர் ரெட்டி தக்காளி உற்பத்தியில் ரூ.36 லட்சம் வருமானம் ஈட்டியிருந்தார். இதையடுத்து அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென தக்காளி விளைச்சலால் பணக்காரர் ஆகியிருக்கும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அவசியம் என்றும் சில தரப்புகளில் இருந்து கருத்துகள் கூறப்படுகின்றன.