மகளிர் மட்டும் ஏற்படுத்திய விழிப்புணர்வால் ஃபேஸ்புக்கில் தோழிகளை தேடும் பெண்கள்
- IndiaGlitz, [Tuesday,September 19 2017]
பொதுவாக ஆண்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு வேலைக்கு சென்று திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனாலும் பள்ளி காலத்தில் இருந்தே நட்பை மெயிண்டன் செய்து வருவார்கள். இன்றும் பல ஆண்கள் பள்ளிகால நண்பர்களுடன் தொடர்பில் தான் இருப்பார்கள். மேலும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வந்த பின்னர் உலகமே கைகளில் அடங்கிவிட்டதால் நட்பின் நீள,அகலம் இன்னும் விரிவடைந்துள்ளது.
ஆனால் நட்பை பேணிக்காப்பதில் ஆண்கள் அளவுக்கு பெண்கள் இல்லை என்பதே ஒரு சோகம் தான். திருமணம், கணவர், குழந்தைகள் என்று பெரும்பாலான பெண்களின் உலகம் சுருங்கிவிடுகிறது. ஒருசிலர் மட்டுமே இதில் விதிவிலக்காக இருப்பார்கள். இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த 'மகளிர் மட்டும்' திரைப்படம் பெண்களிடையே நல்ல விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் பார்த்த பின்னர் பல பெண்கள் தங்களது பள்ளி, கல்லூரி தோழியை ஃபேஸ்புக்கிலும், நேரிலும் தேடி வருகின்றனர் என்ற செய்தி இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். இதுவொரு பெண்களின் 'ஆட்டோகிராப்' படம் என்று கூறினால் மிகையாகாது
பெண்களுக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கிறது என்பதை மிகச்சரியாக உணர வைத்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தை தயாரித்த சூர்யாவுக்கும், இயக்கிய இயக்குனர் பிரம்மாவுக்கும், இந்த படத்தில் பெரியாரிய கருத்துகளை தைரியத்துடன் விதைத்த ஜோதிகா கேரக்டருக்கும் நிச்சயம் நம்முடைய பாராட்டுக்களை தெரிவித்தே ஆகவேண்டும்