தலைமை காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மதுரை ஐகோர்ட் உத்தரவு
- IndiaGlitz, [Thursday,July 02 2020]
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் காப்பாற்றப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக சிபிசிஐடி இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அடுத்து நேற்று வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், அதிரடியாக அடுத்தடுத்து கைது நடவடிக்கையை தொடங்கினர்
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும், அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதி அளித்த சாட்சியம் தான் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு குற்றத்திற்கு எத்தனை ஆதாரங்கள் இருந்தாலும் நேரடியாக பார்த்த சாட்சி தான் வலிமையான ஆதாரமாகக் கருதப்படும். அந்த வகையில் ரேவதியின் சாட்சி இந்த வழக்கின் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் அதே நேரத்தில் தலைமை காவலர் ரேவதி தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு கொண்டார். அவருடைய கணவரும் தனது மனைவிக்கும் தங்களுடைய குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும் என்றும், தனது மனைவி ரேவதி வாக்குமூலம் அளித்த நாளிலிருந்து சாப்பிடவில்லை என்றும், கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், நாள்தோறும் நூற்றுக்கணக்கான செல்போன் அழைப்புகள் வருவதாகவும், பாதுகாப்பு கருதி அதை எடுக்கவில்லை என்றும் எனது மனைவிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்“ என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த தலைமை காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் அடுத்ததாக பல்வேறு அதிரடி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில் தற்போது ரேவதியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த அதிரடி உத்தரவையும் பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது