சிட்டுக்குருவிக்காக பைக்கை விட்டுக்கொடுத்த பெண்: நவீன பாரி வள்ளல் என பாராட்டு
- IndiaGlitz, [Friday,July 17 2020]
பாரி வள்ளல் என்ற மன்னன் முல்லைக் கொடி ஒன்று படர்வதற்கு கொழு கொம்பின்றி இன்றி தவித்த நிலையில் தன்னுடைய தேரை தந்த வள்ளல் தன்மை குறித்து சங்கத்தமிழில் கூறப்பட்டுள்ளது என்பதும் இதனையடுத்து அந்த மன்னருக்கு பாரி வள்ளல் என்ற பெயர் ஏற்பட்டது என்றும் படித்திருக்கிறோம். இந்த நிலையில் நவீன பாரிவள்ளலாக மாறி சிட்டுக்குருவிக்கு தனது இரு சக்கர வாகனத்தை தானமாக கொடுத்த பெண் ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சிட்டுக்குருவி இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என்பது தெரிந்ததே. சுற்றுச்சூழல் மாசு, செல்போன்களின் கதிர்வீச்சு, பட்டாசு, வாகன சப்தம், உள்ளிட்ட பல காரணங்களால் சிட்டுக்குருவி இனம் தற்போது மிகக் குறைவாக உள்ளது
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் மனைவி இந்து என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சிட்டுக்குருவி கூடு கட்டியிருந்ததை தனது குழந்தை சொல்லியதன் மூலம் தெரிந்து கொண்டார். அந்த சிட்டுக் குருவி கூட்டை கலைக்க மனமின்றி அந்த சிட்டுக் குருவி முட்டையிட்டு குஞ்சு பொரித்து தானாக பறந்து செல்லும் வரை அந்த வாகனத்தை எடுக்க போவதில்லை என்று இந்து உறுதி செய்தார்
தனக்கு இருசக்கர வாகனம் இல்லாததால் சிரமமாக இருக்குமென்றாலும் சிறு சிரமத்தை ஏற்றுக்கொண்டு சிட்டுக்குருவி தானாகவே பறந்து செல்லும் வரை தான் தன்னுடைய வாகனத்தை சிட்டுக்குருவிக்காக விட்டுக்கொடுத்தார். அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்றுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தை மூன்று மாதங்கள் தானமாக கொடுத்த வழக்கறிஞரின் மனைவி இந்துவை நவீன பாரிவள்ளல் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்