ஆர்.கே.நகர் தேர்தலை கலகலக்க வைத்த 'மதுரவீரன்' பாடல்

  • IndiaGlitz, [Saturday,December 09 2017]

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்து வரும் 'மதுரவீரன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற 'என்ன நடக்குது நாட்டுல' என்ற சிங்கிள் பாடல் வெளிவந்தது.

அனைத்து தரப்பினர்களின் நல்ல வரவேற்ப்பையும் , பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த பாடல் சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்தது. இப்பாடலை தற்போது பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சார பொதுகூட்டத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்ல பயன்படுத்திவருகிறார்கள். இன்றையளவில் பரபரப்பாக இருக்கும் RK நகர் பிரச்சார களத்தில் தவறாமல் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல் ஒலிக்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது. மதுரவீரன் திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடலே பெரிய அளவில் மக்களிடம் சென்று அடைந்திருப்பது படகுழுவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

இதை பற்றி படத்தின் இயக்குநர் P.G. முத்தையா கூறியது , எனக்கு படத்தில் பட்டுக்கோட்டையார் பாடலை போல ஒரு பொதுவுடைமை பாடல் தேவைப்பட்டது. இதை நான் கவிஞர் யுகபாரதியிடம் கூறியதும் அவர் “ என்ன நடக்குது நாட்டுல “ என்று தொடங்கும் பாடல் வரிகளை எனக்கு எழுதி தந்தார். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக மக்களிடம் இந்த பாடல் சென்றடைந்துள்ளது. அரசியல் கட்சி பொதுகூட்டங்களிலும் இப்பாடல் தற்போது முக்கிய பங்குவகிக்கிறது. இப்பாடலின் இசை எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி டோலக் மற்றும் ஹார்மோனியம் என்ற இரண்டே கருவிகளை கொண்டு இதை உருவாக்கியுள்ளார். பாடல் வரிகளின் முக்கியத்துவம் மற்றும் நிஜமான மேடை பாடலை போல் இப்பாடல் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து சந்தோஷ் தயாநிதி இரண்டே கருவிகளை கொண்டு இப்பாடலை உருவாக்கியதால் இப்பாடல் தற்போது மேடையில் இசையமைத்து பாடுபவர்களுக்கு எளிமையாக உள்ளது. நண்பர்கள் பலர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ என்ன நடக்குது நாட்டுல “ பட்டுக்கோட்டையார் பாடலை போல் உள்ளது என்று கூறியது , நான் நினைத்தது போல் இப்பாடல் வந்துள்ளது என்ற நம்பிக்கையை தந்தது என்றார் இயக்குநர் P.G.முத்தையா.