நீட் தேர்வு பயத்தால் 19 வயது சிறுமி தற்கொலை… தொடரும் அவலம்…
- IndiaGlitz, [Saturday,September 12 2020]
மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா தாக்கத்தால் நீட் தேர்வு குறித்த அறிவிப்புகள் தாமதமாக வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்புக்கு பின்னர் தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தினால் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்குமுன் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு பயத்தினால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதையடுத்து தற்போது மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசித்துவரும் காவல் ஆய்வாளர் முருகுசுந்தரத்தின் 19 வயது மகள் ஜோதி துர்கா நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தற்கொலை செய்து கெண்டிருக்கிறார். இவர் நாளை நடக்கவிருக்கும் நீட் தேர்வில் தான் வெற்றி பெறுவோமா என்ற பயத்தினால் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தற்போது ரிசர்வ் லைன் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைத் தவிர நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட பொழுதே புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி சிவசங்கரி தேர்வு நெருங்கி வருகிறது என்ற பயத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்வு குறித்த தேதிகளில் குழப்பம் நிலவி வந்தததும் தற்கொலைக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. மாணவர்கள் இதுபோன்று பயத்தினால் தற்கொலை செய்து கொள்ளும் விவகாரம் தமிழகத்தில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.